110. கோவே நின்பதம் துதியா வஞ்ச நெஞ்சக்
கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ்கின்றேன்
சாவேனு மல்லனின்பொன் னருளைக் காணேன்
தனியேனை யுய்யும் வண்ணம் தருவ தென்றோ
சேவேறுஞ் சிவபெருமா னரிதி னீன்ற
செல்வமே யருள்ஞானத் தேனே யன்பர்
தாவேதம் தெறுந் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: அன்பர்களின் வலிய வினைத் துன்பங்களைப் போக்கும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, எருதேறும் சிவபெருமான் அருமையாகப் பெற்ற செல்வ மகனே, திருவருள் ஞானமாகிய தேனாகியவனே, தலைவனே, நின்னுடைய திருவடியைச் சிந்திக்காத வஞ்சம் பொருந்திய நெஞ்சினையுடைய கொடியவரிடம் சென்று மன வருத்த மெய்தித் துன்பத்தில் மூழ்குகின்றேன்; அதனால் சாவதுமின்றி நினது அழகிய திருவருளைக் கண்டிலேன்; தமியனாகிய யான் உய்தி பெறும் பொருட்டு அதனை அருளுவது எப்பொது? தெரிவித்தருள்க, எ. று.
தா-வலிமை. திருவருளாலோ நுகர்ச்சியினாலோ கழிவதன்றி வேறே எவ்வாற்றாலும் கெடுவதில்லாமை நோக்கி வினைத் துன்பத்தைத் “தாவேதம்” என்றும், திருவருள் உருவிற் றாதலால் திருத்தணியைத் “தாவேதம் தெறும் தணிகை” என்றும் உரைக்கின்றார். ஏதம்-துன்பம், சிவன் தனது நெற்றி விழியாற் பெற்றமை பற்றிச் “சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே” என்று கூறுகின்றார். சே-எருது. ஞானமே திருவுருவாய்ச் சிந்திப்பார் சிந்தையில் தேனூறி நிற்கும் சிறப்புப் பற்றி “அருள் ஞானத் தேனே” என்று புகழ்கின்றார். கலைஞான மெய்ஞ் ஞானங்கட் கெல்லாம் மேலாயதாகலின், “அருள் ஞானம்” என்று சிறப்பிக்கின்றார். உண்மை யன்புடையார் பெற விரும்புவது வினை நீக்கமாதல் பற்றி அன்புடையார் தாவேதம் தெறும் தணிகை எனல் வேண்டிற்று. தேவ சேனாபதி யாதலாற் “கோவே” என்கின்றார். திருவடிக்கண் அன்பில்லார் இயல்பை விளக்குதற்கு, “வஞ்ச நெஞ்சக் கொடியர்” என்றும், அவரது செயல் இன்ன தென்றற்கு “நின் பதம் துதியாக் கொடியர்” என்றும், பதம் துதியா வஞ்சமும் கொடுமையும் நெஞ்சிற் கொண்டிருப்ப தறியாது கொடியவரிடம் சென்று துன்புற்றேன் என்பாராய்க் “கொடியோர் பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன்” எனவும், அதனால் செத் தொழியாமல் உயிர் வாழ்கின்றேன் என்பாராய்ச் “சாவேனு மல்லேன்” எனவும் சொல்லி வருந்துகின்றார். திருவருள் ஞானத்தாலன்றித் துன்பம் நீங்காதாதலால், சாவாதிருந்தும் நின் அருளைப் பெறுகின்றே னில்லை; திருவருள் துணையின்றித் தனித்திருக்கும் எனக்கு உய்யும் நெறி வேறில்லை என்று தெரிவிக்கலுற்று, “நின் பொன்னருளைக் காணேன், தமியேனை உய்யும் வண்ணம் திருவருளைத் தருவது என்றோ” என வேண்டுகின்றார்.
இதனால் திருவருளைப் பெற்றாலன்றிக் கொடியவர் தொடர்பால் உண்டாகும் துன்பத்தின் நீங்கி உய்தி பெறுமாறு இல்லை என்பதாம். (8)
|