1100. ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்
சோதி யேதிருத் தோணிபு ரத்தனே
ஒதி யேதரும் ஒற்றிஅப் பாஇது
நீதி யேஎனை நீமரு வாததே.
உரை: ஆதியாகிய பொருளே, தில்லையம்பலத்தில் ஆடல் புரிகின்ற சோதியுருவானவனே, திருவுடைய தோணிபுரத்தில் கோயில் கொண்டருள் பவனே, ஞானப் பொருளை ஓதுவித்தளிக்கும் திருவொற்றியூர் அப்பனே, இது என்னையோ? நீ போந்து மனத்தின்கட் பொருந்தாதது நீதிதானோ? கூறுக. எ.று.
ஆதியே, சோதியே, தோணி புரத்தனே, ஒற்றியப்பா, இது என்னை; நீ மருவாதது நீதியோ, கூறுக என இயைத்துரைக்க. மாயையாகிய சடசத்தியினின்று உலகனைத்தும் படைத்தளித்த ஆதிமுதல்வனாதலின் “ஆதியே” என்று கூறுகின்றார். உலகிற்கு அவன் ஆதி யென்றும், அவன் அனாதி பரம்பொருள் என்றும் பகுத்துணர்க. தில்லைக் கோயிலினுள் அமைந்த பொன்னம்பலத்தில் ஆடுதல் பற்றி, “தில்லையம்பலத்து ஆடல் செய்” என்றும், ஆடுகின்ற கூத்தப் பெருமான் ஞான சோதியாய் விளங்குகின்றமை தோன்ற “ஆடல் செய் சோதி” என்றும் சொல்லுகின்றார். “ஆதியாய் நடுவுமாகிய அளவிலா வளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப், போதியா நிற்கும் தில்லைப் பொது நடம்” (பெரிய. பு) என்று சேக்கிழார் உரைப்பது காண்க. தோணி புரம், ஞான சம்பந்தர் பிறந்த ஊராகிய சீர்காழிக்குரிய பெயர். பன்னிரண்டனுள் ஒன்று. “துள்ளல் ஒலி வெள்ளத்தின்மேன் மிதந்த தோணி புரந்தானே” (பிரம) என்று ஞானசம்பந்தர் பெயர்க் காரணம் கூறுவர். ஒற்றியூர்க்கண் பல்லவ சோழர் காலத்தில் திருக்கோயில் கல்வி நிலையமாய் விளங்கினமையின் “ஓதியே தரும் ஒற்றியப்பா” என உரைக்கின்றார். எழுத்தறியும் பெருமான் என்றும் வியாகரணதானப் பெருமான் என்றும் ஒற்றியப்பனைக் கோயிற் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன. நினைந்து தொழுகின்றவர் மனத்துள் விரைந்து தோன்றும் இயல்புடைய பெருமான் தோன்றாமை விளங்க, “இது என்னை” என வியந்து பேசுகின்றார். வழிபடுவோர் சிந்தையுட் போந்து கலந்து நிற்கின்ற நீ கலவாமை நீதியாகாது என்றற்கு, “நீதியே நீ மருவாததே” என்று கேட்கின்றார். ஏ, வினாப் பொருட்டு.
இதனால், நினைந்து வழிபடுவர் சிந்தைக்கண் வந்து கலந்து மகிழ்விப்பது நீதியாக வுடையவர் ஒற்றிப் பரமன் என்பதாம். (3)
|