1102.

     தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக்
     கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே
     நலத்த னேஒற்றி நாயக னேஇந்த
     மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே.

உரை:

     தில்லைத் தலத்தை யுடையவனே, சங்கரனே, தலைமாலை யணிந்தவனே, நெற்றியிற் கண்ணுடையவனே, நலம் செய்பவனே, திருவொற்றியூரையுடைய தலைவனே, மலபந்தமுடையனாகிய இந்த என்னையும் என் திருவருளில்வாழச் செய்தல் மாண்பாகும். எ.று.

     சிவபெருமானுக்குரிய திருப்பதிகள் பலவற்றுள் தில்லைப்பதி ‘கோயில்’ எனச் சிறப்பாகக் கூறப்படும் தலையாய தலமாதலின், “தில்லைத் தலத்தனே” என்று கூறுகின்றார். தலத்தனே தில்லை என்றாரேனும் தில்லைத் தலத்தன் என்பது கருத்தாகக் கொள்க. சங்கரன் என்ற வடசொல் சுகத்தைச் செய்பவன் என்னும் பொருளது. தலைக்கலம் - தோல் தசை நரம்பு முதலியனவின்றித் தலை மாத்திரம் கொண்டு மாலையாகத் தொடுக்கப்பட்ட மாலை, இதனைத் ‘தலைமாலை’ என்பது வழக்கு, தலைகள், பிரமன் முதலாக இறந்த தேவர்களின் தலைகள் (கந்தபு. ததீசி யுத். 12). தலைமாலையைத் தலைக்கலம் என்று வழங்குதலை “வெண்டலை கலமாச் செக்கர் மாமுடி தரிக்குமோ” (ததீசி. யுத் 4) என்பதனாலறிக. நெற்றியிற் கண்ணும் திறக்கவும் மூடவும் அமைந்த தென்ப துணர்த்தற்குக் “கண்ணுடையாளன்” என்று விளக்குகின்றார். நலமனைத்தும் உருவாய்த் திரண்டவர் என்றற்கு “நலத்தனே” என நவில்கின்றார். ஆணவம் மாயை கன்மம் என்ற மூவகை மலமும் உடையவனென்றற்கு “மலத்தனேன்” என்றும், மலத்திற் கிடப்பாரைத் தூக்கி வாழ்வித்தல் அருளுருவாய இறைவற்குக் கடனாமென்பது பற்றி “மலத்தினேனையும் வாழ்வித்தல் மாண்பதே” என்றும் தெரிவிக்கின்றார்.

     இதன்கண், மீளா நரக மென்றும் அதோகதி என்றும் கூறி அச்சுறுத்தும் சிலர் கூற்றுக்களைப் பொருளாகக் கொள்ளாமல், மலமுடைய கீழ்மக்களையும் அருள்கூர்ந்து கைகொடுத்து உய்திபெறச் செய்வது அருளாளனான இறைவன் செயல் என வற்புறுத்தவாறு காணலாம்.

     (5)