1103. மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றிஅப் பாஉன்தன்
ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.
உரை: மாண்பு கொண்ட அம்பலத்தில் ஆடல் புரிகின்ற மாணிக்கம் போன்ற பெருமானே, விடத்தை ஊணாகக் கொண்ட (கழுத்தில் அடக்கிக் கொண்ட) ஒற்றியூர் அப்பனே, உன்னுடைய வலிமிக்க சேவடியின் புகழைப் பரவாத கோணிய நெஞ்சமுடைய கொடியவனாகிய யானும் உய்தி பெறுவேனோ. எ.று.
கூத்தப் பெருமானை மாணிக்கக் கூத்தன் என்பதுண்மையின் “மாண்கொள் அம்பல மாணிக்கமே” என்று கூறுகின்றார். மாண்பு, ஈறு குன்றி மாண் என வந்தது. இன்றும் இரத்தின சபாபதி என்றொரு மூர்த்தம் தில்லைமன்றில் வைத்து வழிபடப் பெறுகிறது. விடமுண்ட கண்டன் என்பது “விடமூண் கொள் கண்டம்” எனப்படுகிறது. ஏண் - வலிமை. “ஏண் கொள் சேவடி, மதனுடை நோன்றாள்” என்றாற்போல வந்துள்ளது. இறைவன் புகழை ஓதிப் புகழாத நெஞ்சம் கொடுமை நிறைந்ததாம் என்றற்குக் “கோண் கொள் நெஞ்சக் கொடியன்” எனக்கூறுகின்றார். கோணல் என்பது ஈற்று அல் விகுதி கெட்டுக் ‘கோண்’ என நின்றது.
இதனால், இறைவன் பொருள் சேர் புகழை யேத்தாமற் கோடிய நெஞ்சினர் உய்தி பெற்றார் என்று தெரிவிக்கின்றார். (6)
|