1104. உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
உரை: திருவருட் செல்வமாகிய சிவமே, அருளாகிய மழையைப் பொழியும் பெருமுகில் போன்றவனே, முப்புரத்தை எய்ய முற்பட்டு எரித்தருளிய எந்தையே, உய்தல் வேண்டி இவ்வுலகில் உன் திருவருளை எய்துதற்கு யான் செய்யலாவது இன்னதெனத் தெரிகின்றிலேன், தெரிவித்தருள்க. எ.று.
சிவன்பால் உள்ளது சிறப்புடைய திருவருட் செல்வமாதலின், அது விளங்கப் பொதுப்பட “செல்வமே” என்றும், அதனையே மழைபெய்யும் முகில் போல உலகில் வாழும் நல்லுயிர்த்திரட்குப் பெய்தருளுமாறு தோன்ற, “பெய்யும் வண்ணப் பெரு முகிலே” என்றும், முப்புரத்தாரொடு பொரச்சென்ற சிவன் மேரு மலையை வில்லாகவும் திருமாலை யம்பாகவும் கொண்டு புரங்களை எரித்தற்கே சென்றாராகலின், “புரம் எய்யும் வண்ணம் சென்று” என்றும், பின்னர் நகைத்தெரித்தாராகலின் “எரித்து” என்றும், மூவர்க்கு அருளினமையின் “அருள் தந்தையே” என்றும் கூறுகின்றார்.
இதன்கண், இவ்வுலகில் இறைவன் திருவருளை இனிது எய்துதற்குச் செய்வது யாது எனத் தெரியாமல் தெரிவிக்குமாறு சிவபெருமானையே வேண்டுமாறு அறிகின்றோம். (7)
|