1105. எந்தை யேதில்லை எம்இறை யேகுகன்
தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன்
முந்தை ஏழ்பவ மூடம யக்கறச்
சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே.
உரை: எம் தந்தையே, தில்லையில் கோயில் கொண்டருளும் எம் இறைவனே, குகனுக்குத் தந்தையே, திருவொற்றியூரில் வீற்றிருக்கும் தண்ணிய அமுதம் போல்பவனே, என்னுடைய முன்னைய ஏழ் பிறப்பினும் சேர்ந்த மாயா மயக்கம் கெடவும், சிந்தைக்கண் படிந்த முக்குண வகையால் வரும் குற்றம் திருத்தமடையவும் அருள் புரிவாயாக. எ.று.
எம் தந்தையென்பது எந்தை என் மருவி, உலகில் மக்கள் அனைவர்க்கும் தந்தையானவன் என்ற பொருள்பட வழங்கிவருகிறது. உயிர்கள் செய்யும் வினைவகைகட் கேற்ப நலம் தீங்குகளை முறைசெய்தளிப்பவனாதலால், “எம் இறையே” என்று ஏத்துகின்றார். முருகப் பெருமானைப் பெற்ற தந்தையாதலின் “குகன் தந்தையே” என்று குறிக்கின்றார். முருகற்கு குகன் என்பது ஒரு பெயர். திருவொற்றியூர்க்கண் இருந்து மக்கட்கு நல்வாழ்வு வழங்கும் சிறப்பு நோக்கி, “தண்ணமுதே” என்று இசைக்கின்றார். பிறப்பு வகை ஏழாதலின் ‘ஏழ்பவம்’ என்றும் அவை இப்போதுள்ள பிறப்புக்கு முன்னும் பின்னும் உள்ளவையெனினும், பின் வருவனவற்றை வாராமல் தடுத்தல் இப்பிறவிக் கண்ணதாகலின், முந்தைப் பிறவியில் சஞ்சிதமாய் நின்றவை உண்மை பற்றி, “முந்தை யேழ்பவம்” என்றும், “மூடம் ஆகு பெயராய், வினைவிளைவாகிய அசத்தின்மேல் நிற்கிறதென்றும் கொள்க. “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினைதீரினன்றி விளையாவாம்” என்ற சிவஞானபோதத்தால் அறிக. பிறக்கும் பிறவிதோறும் மலமாயை காரணமாக வந்து கூடும் அறியாமை, பவமூடம் என்று உரைப்பதுண்டு. முக்குண வயப்பட் டொழுகும் சிந்தை எய்தும் சுகதுக்க போகங்களாற் பிறக்கும் குற்றம் “சிந்தை யேதம்” என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பவம் மாயாமல மயக்கமின்மையும் சிந்தை முக்குண மயக்கக் குற்றமின்மையும் உற்று விளக்கமுற அருளல் வேண்டுமென்பதாம். (8)
|