1106. திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத்
திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப்
பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு
வருந்த என்தனை வைத்தத ழகதோ.
உரை: திருந்திய நான்காகிய மறைகள் ஓதப்படுகின்ற தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் இருந்து ஒளிர்கின்ற ஞானமென இயன்ற ஒளிப் பொருளே, திருவொற்றியூரில் எழுந்தருளி,
இருக்கிற புண்ணியப் பொருளே, இவ்வுலகில் இருந்து எளியேனை வருந்த வைத்தது நினக்கு அழகாகுமோ? எ.று.
தில்லையில் வாழ்ந்த வேதியர்கள் மறை நான்கும் வல்லராய்த் திருந்திய வாழ்க்கை யுடையராய் விளங்கினமையின், “திருந்த நான்மறைத் தில்லை” என்றும், அங்குள்ள பொன்னம்பலம் கூத்தப்பெருமான் ஞான மயமாய் ஒளிருமிடம் என்பதுபற்றி, “சிற்றம்பலத்து இருந்த ஞான இயல் ஒளியே” என்றும் கூறுகின்றார். திருந்திய நான்மறை என்றபாலது ‘திருந்த’ என வந்தது. தீர்ந்த நான்மறை திருந்த நான்மறையாயிற்றென்றலும் உண்டு. திருவொற்றியூரின்கண் சென்று காணும் போதெல்லாம் மனம் இன்பநிறைவால் அமைதி பொருந்த வீற்றிருக்கும் பெருநலத்தை வியந்து, “ஒற்றிப் பொருந்த நின்றருள் புண்ணியமே” என்று புகழ்கின்றார். இங்கே யிருந்து அடியேனை வாழ வைத்த பெருமானாகிய நீ வாழ்க்கையுள் வருத்த முறுவித்தது என்னையோ என்று என்னால் அறிய முடியவில்லை; இச்செயல் நின்னுடைய அருட்பெருக்குக்கு அழகு தருவதாகுமோ என்பாராய், “இங்கு வருந்த என்றனை வைத்தது அழகதோ” என்று வினவுகின்றார். அழகுடையதென உடைமை யுணர்த்தும் இகர விகுதி புணர்ந்து அழகியது என நிற்றற் பாலது செய்யுளாதலின் அவ்விகுதி கெட்டு அழகதோ என வந்தது.
இதன்கண், அடியேனை இங்கு வாழ வைத்த பெருமானாகிய நீ வருந்த வைத்தது அழகன்று என்று விளம்பியவாறாம். (9)
|