1107. வைத்த நின்அருள் வாழிய வாழிய
மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
உய்த்த நல்அருள் ஒற்றிஅப் பாஎனைப்
பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே.
உரை: மெய்ம்மை நிலவும் தில்லைப் பதியின்கண் எழுந்தருளுகின்ற இன்ப மூர்த்தமே, நல்ல திருவருளையே உயிர்கட்கு அருளுகின்ற ஒற்றியப்பா, பொய்த்தலையுடைய எண்ணங்களைக் கொண்ட மனதை விட்டொழித்து உன்னைப் போற்றி செய்து வாழுமாறு செய்த நினது திருவருள் வாழ்க வாழ்க. எ.று.
மெய்ம்மை கொண்ட சிவநெறியின்கண் வேதியர் முதல் அனைவரும் வாழுமூராதல் பற்றி, “மெய்த்த தில்லை” என்றும், அங்கே அம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரிந்து உயிர்களை இன்புறுவித்தலின், சிவனை “இன்பமே” என்றும் பரவுகின்றார். உலகில் உயிர்கட்கு நன்னினைவும் நன்மொழியும் நற்செய்கையுமே தொடக்கத்தில் அருளி வாழ்விக்கும் கூத்தப்பிரானது பெருந்தன்மையை வியந்து பரவுதலால், “உய்த்த நல்லருள் ஒற்றியப்பா” என்றும், பொய்யும் வஞ்சமும் நிறைந்த உலகியல் நினைவுகட்கு இடமாகாமல் இறைவன் திருவருளிலே ஒன்றி நிற்றலால் மிக்க மகிழ்ச்சி மேலிட்டுப் “பொய்த்த சிந்தைவிட்டு உன்னைப் போற்ற வைத்த அருள் வாழ்க வாழ்க” என வாழ்த்துகின்றார்.
இதன்கண், பொய்ந்நெறியின் நீங்கி மெய்ந்நெறியில் நின்று நின்னைப் போற்றும் பணியிலே நிற்குமாறு என்னை இருத்திய திருவருள் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றார். (10)
|