1108.

     போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
     சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
     தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
     ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.

உரை:

     புண்ணிய பொருளாய சிவனே! திருவொற்றியூர்க்கண் மேவியிருந்து உன்னைப் போற்றி யுய்யுமாறு என்னைச் செய்தாய்; நின் புகழைப் பலர்க்கும் சொல்ல வைத்தாய்; நெஞ்சினால் உனது பரமாம் தன்மையைத் தெளிந்து கொள்ளச் செய்தாய்; தெளிந்து என் உள்ளத்தில் ஊறும் அன்பை உனக்கே சொரியும்படி செய்தாய்; இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்? எ.று.

     புண்ணியம் செய்பவர் எய்தும் பயன் அத்தனையும் திரண்டது போலும் தோற்றம் கொண்டிருப்பது பற்றி, “புண்ணியனே” எனப் புகல்கின்றார். உலகின்கட் பிறந்த யான் செய்தற்குப் பல செயல்கள் இருப்ப, உன்னைப் போற்றுவதாகிய பணி யொன்றையே செய்வித்தாய் என்றற்குப் “போற்ற வைத்தனை” எனவும், செல்வர் அரசர் முதலாயினார் புகழ் இருக்க, அவற்றை விட்டு என்னை உனது பொருள்சேர் புகழே ஓதவைத்தாய் என்பார், “எனைச் சாற்ற வைத்தனை நின் புகழ்” என்றும் பல் பொருட் கேற்பின் நல்லது தெளியும் சிறப்புடைய சிந்தையைக் கொண்டு பரசிவமாகிய நினது தன்மையைத் தெளிவித்தாய் என்பார், “தன்மையைத் தேற்ற வைத்தனை நெஞ்சை” என்றும், இவற்றை நினைந்து நோக்கியபோது சிவன்பால் அன்பு பெருகினமையின் அதனை இறைவனிடம் செலுத்திய திறத்தை “அன்பை ஊற்ற வைத்தனை” என்றும் உரைக்கின்றார்.

     இதன்கண், இறைவன் தன்மையைத் தெளிந்து புகழைத் தெரிந்து நாளும் சாற்றத்தக்க பணியினை அருளிய பெருமானுக்குக் கைம்மாறு யாது செய்வேன் என்று தெரிவித்தவாறாம்.

     (11)