111. ஓயாது வருமிடியால் வஞ்சர்பாற் சென்
றுளங்கலங்கி நாணியிரந் துழன்றெந்நாளும்
மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ
மருந்தாய நின்னடியை மறந்திட்டேனே
தாயாகித் தந்தையாய்த் தமராய் ஞான
சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
சாயாத புகழ்த் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: குறையாத புகழை யுடைய தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வுடைய பெருமானே, தாயும் தந்தையும் உறவும் மெய்ஞ்ஞான குரவனும், அவனாற் காட்டப்படும் தெய்வமும் பிறவுமாய் மேன்மையுற்ற ஒரு பரம்பொருளே, சுருங்காமல் பெருகி வருத்தும் வறுமையால் வாடி வஞ்சமுடைய தீயவரிடம் சென்று மனநிலை கலங்கி நாணத்தால் வருந்தி இரத்தலைச் செய்து மறுக்கப்பட்டு அலைந்து இவ்வாறே நாடோறும் நீங்காத துயரமுற்று மெய்யும் மனமும் மெலிந்து தெய்வ மருந்தாகித் தப்பாத நின் திருவடியை மறந்தொழிந்தேனாதலால் எனக்கு உய்தி உண்டாகுமோ, கூறுக, எ. று.
மன்னுயிர்க்கு மாதா பிதா குரு தெய்வமாய் விரிந்து பரந்து வாழ்வளிக்கும் பரம்பொருள் ஒன்றே யாதலின், “தாயாகித் தந்தையாய்த் தமராய் ஞான சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே” என்று உரைக்கின்றார். உலகில் உயிர்களை ஈன்று புறந்தருபவள் தாய்; வளரும் உயிர்க்கு உலகியலறிவு ஒழுக்கம் நல்குபவன் தந்தை; வாழ்தற்கு அறிவுத் துணையும் பொருட் டுணையும் செய்பவர் தமர்; மண்ணக வாழ்வின் நீங்கி மறுமையும் வீடு பேறுமாகிய வாழ்வுக்குரிய ஞானம் வழங்குபவன் ஞானாசிரியன்; வீடு பேற்றின்கண் உயிரை உய்ப்பது தெய்வம். இவை
யாவுமாய் விரிந்து விளங்கும் பரம்பொருள் ஒன்றே யாதலின், “தழைத்த ஒன்றே” எனச் சாற்றுகின்றார். மால் விளைவித்து மயக்கும் குரவன்மார்களின் நீக்குதற்குச் “சற்குரு” என்று கூறுகிறார். சாய்தல்-குறைதல். மிடி-வறுமை. இதனை நிரப்பு என்று குறித்து நாடோறும் தோன்றி வருத்தும் அதன் இயல்பை, “இன்றும் வருவது கொல்லோ நெருநலும், கொன்றது போலும் நிரப்பு” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. அது பற்றியே “ஓயாது வரும் மிடி” என்றும், “எந்நாளும் மாயாத துயரடைந்து” என்றும் இயம்புகின்றார். ஈவார் போல் இன்முகம் காட்டி மறுப்பவரை “வஞ்சர்” எனவும், அவரால் வஞ்சிக்கப்பட்டு எய்திய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும், “வஞ்சர்பாற் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும் மாயாத துயரடைந்தேன்” எனவும், துயரத்தை அறிவின் துணை கொண்டு ஆற்றிய காலைப் பிறக்கும் சிந்தைத் தெளிவால், மிடிமை நோய்க்கு மருந்தாவது இறைவன் திருவடி யென்பதும், அதனை நினையாது மறந்தமையும் விளங்கினமை புலப்படத் “தெய்வ மருந்தாய நின்னடியை மறந்திட்டேனே” என்று மொழிகின்றார். எனக்கு உய்தி என்பது முதலாயின குறிப்பெச்சம்.
இதனால் வறுமைத் துன்பம் முருகப் பெருமான் திருவடியை மறப்பித்த கொடுமை உரைத்தவாறு. (9)
|