1110. கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
ஒற்றி மேவிய உலகுடை யோனே.
உரை: மும்மலங்களும் கெட்டொழிய ஒருசேரத் தொடர்பறுத்த சான்றோர் அடைகின்ற திருவொற்றியூரில் உள்ள உலகெலா முடைய பெருமானே, கொடுமை பொருந்திய நெஞ்சினையுடைய யான் கோபமாகிய குற்றமுடையனாய், கோடி கோடியென எண்ணப்படும் குணக் கேடுகள் உடையனாய், மிக்க வஞ்சனை பொருந்திய கள்வனாய் உள்ள எனக்கு உன்னுடைய திருவருளை நல்காதிருப்பாயாயின், கடையவனாகிய யான் அடியவனாவது எவ்வாறு என்று எண்ணி, ஐயனே ஐயனே என அலறிப் புலம்புகின்றேன். எ.று.
நேர்மையாக நினைப்பதில்லாத நெஞ்சு, ‘கொடிய நெஞ்சு’ எனப்படுகிறது. கொடுமை - நேர்மையில்லாமை; கொடுங்கோல் என்றாற்போல. அடைந்தேன் உடையேன் என்பன முற்றெச்சம். நெஞ்சிற்கொடுமையுறின் கோபம் மெய்ப்பட்டுத் தோன்றுமாகலின், “கோபமே யடைந்தேன்” என்கின்றார். நன்மையாவன நினைத்தற்கும் செய்வதற்கும் உற்ற குணம் மாறித் தீயவே செய்வதனைக் குணப்பழுது எனவும், குணக் கேடு எனவும் கூறுவர். மாயா காரியமான சத்துவ முதலிய குணங்கள் சூழ்நிலை மாற்றத்தால் கணந்தோறும் மாறுமென அறிவு நூல்கள் கூறுவதால், “கோடி கோடியாம் குணப்பழுது உடையேன்” என்று இயம்புகின்றார். கடி - மிகுதி. நெஞ்சில் வஞ்சனை கொண்டு புறத்தே தோன்றாதவாறு மறைத் தொழுகுவது பற்றிக் “கடிய வஞ்சகக் கள்வனேன்” என்று இசைக்கின்றார். வஞ்சம் என்னும் இயற்சொல், ககர விடைநிலை பெற்று வஞ்சகம் என வரும்; நெஞ்சம், நெஞ்சகம் என வருதல் போல. கருணை - திருவருள் ஞானம்; திருவருள் ஞானம் எய்தாவிடத்துச் சிவபெருமான் திருவடியை நெஞ்சிற் கொண்டு அதனையே சிந்தித்தொழுகும் சீரடியாராவது இல்லையாதலால், “கருணை ஈந்திடாதிருந்திடில் கடையேன் அடியனாகுவது எவ்வணம் என்று ஐய ஐய நான் அலறிடுகின்றேன்” எனவுரைக்கின்றார். திருவடி ஞான மில்லாமை கடைமை என்பது தோன்றக் “கடையன்” என்று குறிக்கின்றார். ஐய ஐய என்னும் அடுக்கு வாயாற் சொல்லிப் புலம்புதல் குறித்தது.
இதனால், அடியனாதற் கருளாமை நினைந்து இரங்கியவாறாம். (2)
|