1111. காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
கலங்கு கின்றக் கடையனேன் தனக்குச்
சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்
ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
ஏட நீகடை என்றிடில் அவர்முன்
ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
ஒற்றி மேவிய உலகுடை யோனே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் உலகெலாமுடைய பெருமானே, காமவிச்சை யெனப்படுவதாகிய ஓர் உருவம் கொண்டு, கலக்க முற்றுலவும் கடையவனாகிய எனக்குச் சேமம் எனப்படும் நின்னுடைய திருவருள் கிடைக்காத சிறுமையே என்னை இன்னமும் பற்றி நிற்குமாயின், அருளின்பம் நிறைந்த நெஞ்சினையுடைய சான்றோர் என்னைப் பார்த்து, அட, நீ கடையன் என்று இகழ்ந் தொதுக்குவராயின் அவர்முன் வாயில்லாத ஊமனாய் ஒழிவதன்றி வேறே என் செய்வேன்? எ.று.
ஆடவர் மகளிர் என்ற இருவர் மேனி முழுதும் பரந்து நின்று காம விச்சையைத் தோற்றுவித்தலின் “காமம் என்பதோர் உருக்கொடு” என்றும், அதனாற் பற்றப்பட்ட வுள்ளம் காம நினைவன்றி, வேறு கொள்ளாது கலக்கமுற்றுச் செய்வினைக்கண் தூய்மையின்றிக் கீழ்மை எய்துவித்தலால், “இவ்வுலகில் கலங்குகின்ற கடையேன்” என்றும் தம்மைப் பழிக்கின்றார். சேமம் - நலம் தரும் ஆக்கம்; திருவருளினும் நலம் பயக்கும் ஆக்கம் வேறின்மை பற்றிச் “சேமம் என்பதாம் நின்னருள்” என்று சிறப்பிக்கின்றார். திருவருளாகிய நல்லாக்கம் பெறாதார் பெருமை பெறுவது இன்றிச் சிறுமைக்கே யுரியராதல் பற்றி, “நின்னருள் கிடையாச் சிறுமையே இன்னும் செறிந்திடுமானால்” என்றும், சிறுமையால் எய்தும் கீழ்மை நிலையை யெண்ணி, “ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில்” என்றும் இயம்புகின்றார். திருவருட் செல்வத்தால் ஏமாப்புற்ற மேலோரை “ஏம நெஞ்சினர்” என்றும், அவர்களுடைய அறிவுக் கண்கட்கு என்பால் அருளிலாச் சிறுமை தோன்றி என்னை இகழ்விக்கும் என்பார், “என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில்” என்றும், வாயிருந்தும் ஒன்றும் கூறமாட்டா தொடுங்கிச் செயலற்றொழிவேன் என்பார். “அவர்முன் ஊமனாகுவ தன்றி என்செய்வேன்” என்றும் இரங்குகின்றார்.
இதனால், திருவருட் செல்வர்கள் என்பால் அருளில்லாச் சிறுமை கண்டு இகழ்வாராயின் ஊமையாய்ச் செயலறுவேன் என இரங்கியவாறாம். (3)
|