1112. மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
ஒற்றி மேவிய உலகுடை யோனே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் பெருமானே, மண்ணுலகில் இருப்பவர் உயிரோடு வாழ்வதும், பின்பு அவர்கள் கணப்பொழுதில் நோய்கொண்டு வருந்தி இறப்பதும் ஆகிய இவற்றை யெல்லாம் கண் முன்னே நாடோறும் நிகழக் கண்டும், இவ்வாழ்வின்மேல் ஆசையறாத கற்போன்றே மனமுடையனாகிய யான் எண்ணியிருந்த எண்ணங்களில் ஒன்றும் எண்ணியவாறு முடியா தொழிந்தமையால் யான் செய்வதறியேன்; மேல் வரும் இருவினையாகிய கயிற்றால் என் உள்ளத்தே நிறைந்து நின்று நீ என்னை ஆட்டுகின்றாய். எ.று.
நில்லா வுலக மாதலின் இதன்கண் இருப்பவர் நிற்பவர் போறலால், அவர்களை “நின்றவர்” எனக் கூறுகின்றார். வாழ்வது - உடலொடு கூடி யிருப்பது. பெரும்பாலோர் நோயுற்று வருந்தியே சாதலால், “வருந்தி மாய்வது” என உரைக்கின்றார். வாழ்வதும் மாய்வதும் நாடோறும் எவ்விடத்தும் இடையறவின்றிக் கண்ணெதிரே நடைபெறுவதால், “இவை யெல்லாம் கண்ணில் நேர் நிதம் கண்டும்” என்று இயம்புகின்றார். இவ் வண்ணம் மண்ணக வாழ்வு நிலையின்றி மாய்வது கண்டவிடத்து அதன்பால் வெறுப்புக் கொள்ளவேண்டிய மனம் பெருங்காதல் கொள்வது பொருந்தாது என்றற்கு, “இவ்வாழ்வில் காதல் நீங்கிடாக் கன்மனக் கொடியேன்” என்று பழித்துக்கொள்கின்றார். நிற்பது நில்லாது மாய்வது மனத்தை உருக்கும் செயலாகவும், உருகாமை பற்றிக் “கன்மனம்” என்றும், அது செவ்விதன்றாதலால் “கொடியேன்” என்றும் சொற் பொருள் பொருந்த வுரைக்கின்றார. கற் போன்ற தாயினும் மனம் எண்ணும் எண்ணங்களுள் ஒன்றும் எண்ணியவாறு முடிவதில்லை என்பார், “எண்ணி நின்றவோர் எண்ணமும் முடியாது” என்றும், இது பற்றிச் செய்யத்தகுவது இன்னதென விளங்காமை புலப்பட, “என் செய்கேன்” என்றும் இயம்புகின்றார். இந்நிலையில் வாழ்வதும், மாய்வதும், எண்ணம் முடியா தொழிவதும் வினைகாரணமாக விளைவன என்றும், அசத்தாகிய அவற்றைச் செயற்படுத்துவோன் இறைவன் என்றும் மெய்ந்நூல்கள் கூறுதலால், “இருவினைக் கயிற்றால் உண்ணிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ” என்று கூறுகின்றார். “கருத்ததனுட் கருத்தாய் மேவிக் காலமும் தேசமும் வகுத்துக் கருவியாதி விரிவினையும் கூட்டி உயிர்த்திரளை யாட்டும் விழுப்பொருளே” (ஆகார) எனத் தாயுமானார் உரைப்பது காண்க. பரமன் ஒழிவற நிறையும் மெய்ப்பொருளாதலின் “உள்நிரம்ப நின்று” என்று வள்ளலார் குறித்து மொழிகின்றார்.
இதனால், வாழ்வில் நிற்பதும் மறைவதும் எண்ணம் முடியா தொழிவதும் கண்டு இரங்குமாறு கூறியதாம். (4)
|