1114.

     யாதும் உன்செய லாம்என அறிந்தும்
          ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்
     தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
          தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக்
     கோது செய்மலக் கோட்டையைக் காவல்
          கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
     ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
          ஒற்றி மேவிய உலகுடை யோனே.

உரை:

     திருவொற்றியூரில் எழுந்தருளும் உலகெலாமுடைய நாயகனே, என் உயிர்க்குத் துணையானவனே, எதுவும் உன் அருளின் செயலாம் என அறிந்திருந்தும், ஐயனே, அவர் இடையறவின்றித் தீமையைச் செய்தார், இவர் நன்மையைச் செய்தார்; நாம் அறிவால் அறிந்து செய்வதே செய்வகையாகும் என்று எண்ணிக் குற்றத்தை விளைவிக்கும் மலமாகிய கோட்டையைக் காவலாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்; உனதருளின் செயலாவதறிந்து கொள்ளுதற்குச் செய்தற்குரிய வழியொன்றைக் கூறியருள்க. எ.று.

     யாவும் இறைவன் அருட்செயல் என்பது மெய்ந்நூல்களாலும், தத்துவக் கூறுகளின் செயல் வகையாலும் அறியப்படுவதுபற்றி, “யாதும் உன் செயலாம் என அறிந்தும்” என்று கூறுகிறார். ஒழியாது என்னும் எதிர்மறை வினையெச்சம் ஈறு கெட்டது. தீமை செய்ததையும் நன்மை செய்ததையும் நேரிற் கண்டமை தோன்ற, “அவர் இவர் ஒழியாத் தீது செய்தனர் நன்மை செய்தனர்” எனக் கூறுகிறார். இதனை, “அவர் ஒழியாத் தீமை செய்தனர், இவர் ஒழியா நன்மை செய்தனர்” எனப் பிரித்துக் கூட்டுக. “தீமையொழியாது செய்தனர் எனவும், நன்மை ஒழியாது செய்தனர்” எனவும் கொள்க. தீமை செய்யப்பட்டவர் துன்பமும் நன்மை செய்யப்பட்டவர் இன்பமும் எய்தக் கண்டு, “தீமை செய்தனர் நன்மை செய்தனர்” என்று இயம்புகின்றார். இவர்தம் செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் பார்க்கையில் நாமும் செய்வினைப் பயனை நோக்கிச் செய்தல் வேண்டுமென அறிந்து கொண்டேன் என்பார், “நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்து” என மொழிந்து, அந்நினைவு கொண்டு வாழ்கிற முறையை விளக்குதற்கு, “கோது செய்மலக் கோட்டையைக் காவல் கொண்டு வாழ்கிறேன்” என வுரைக்கின்றார். மலமாயை கன்மங்களென்ற மும்மலங்கள் சூழ்ந்திருப்பது பற்றி, “மலக்கோட்டை” என்றும், சுட்டறிவு கொண்டு செய்வன செய்து பயன் நுகர்ந்து வாழ்வது பற்றி, “காவல் கொண்டு வாழ்கிறேன்” என்றும் கூறுகின்றார். கருவி கரணங்களைக் கொண்டு பொருள்களின் நுண்ணிய உண்மை காண்டற்கண் உயிர்க்கு ஞான நாட்டம் உதவிச் சிறப்பித்தலின், இறைவனை “உயிர்த்துணை” என உரைக்கின்றார். “இம்மாயப் பிறப்பென்னும் கடலாம் துன்பத்திடைச் சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணம், கைம்மான மனத்துதவிக் கருணை செய்து காதல் அருளவை வைத்தாய் காண நில்லாய்” (ஆனைக்கா) என்று திருநாவுக்கரசரும், “தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின், மாயப்படலம் கீறித் தூயஞான நாட்டம் பெற்றபின் யானும் நின் பெருந்தன்மையும் கண்டேன்” (திருவிடை. மும்மணி) எனப் பட்டினத்தடிகளும் கூறுதல் காண்க. இவ்வாறு என் உயிர்த் துணையாதலால், எல்லாம் உன் செயலாம் என்ற உண்மையைக் காண்டற்கு யான் செய்யத் தகுவது இன்னதெனத் தெரிவித்தருள்க; யான் அறிகிலேன் என இரங்குவாராய், “ஓது செய்வதொன்று” என விண்ணப்பிக்கின்றார்.

     இதனால், யாதும் சிவன் செயல் என்பதன் உண்மை காண்டற்குரிய வகையொன்றும் தெரியவில்லை யென இரங்கி விண்ணப்பித்தவாறு.

     (6)