1115. பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்
இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன்
அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை
உந்த மட்டினால் தருதியோ உரையாய்
ஒற்றி மேவிய உலகுடை யோனே.
உரை: திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் உலகெலா முடைய நாயகனே, பாவம் நிறைந்த நெஞ்சினை யுடையனாதலால் பந்தம் ஒன்றினாலே யாகும் பிறவியாகிய பெருங்கடலிற் கிடந்து வருந்துகிறேன்; இந்த அளவில் நான் வருந்தியது போதும்; இனிக் கரையேற வேண்டும்; உன் திருவுள்ளம் யாதோ அறியேன்; அந்த எண்ணம் வந்தது நன்றெனப் பார்த்துக் கொண்டிருக்கின்றாயோ, அல்லது என் அடிமைப் பணியை மேலும் விரும்பி நினது திருவருளாகிய பெருமை தங்கிய தெப்பத்தைப் பற்றி உந்துமளவு உதவுவதுதான் என் தகுதிக் கமைந்தது என்று எண்ணுகின்றாயோ, அருள் கூர்ந்து உரைப்பாயாக. எ.று.
பாவ நினைவுகளையுடைய நெஞ் சென்றற்குப் “பாவி நெஞ்சகம்” என்றும், தந்தைதாய் மக்கள் உடன் பிறந்தார் சுற்றத்தார் நண்பர் முதலாயினார்பால் உண்டாகும் அன்புத் தொடர்பும், அவர்களைப் பேணற் பொருட்டு வேண்டப்படும் பொருள் இடம் கருவி முதலியவற்றின்கண் உண்டாம் ஆசைத்தொடர்பும் பிறவும் பந்தம் எனப்படும். இத்தொடர்புகள் விடாப்பிடியாய் உயிரைப் பிணித்துக் கொள்வதுபற்றிப் பந்தம் எனப்படுகின்றன. இப்பந்தத்தால் ஆன்மாவினுடைய நினைவு சொல் செயல் மூன்றும் உலகியல் வாழ்க்கையே பொருள் என நினைந்து நன்மையும் தீமையும் செய்து பிறந்திறத்தற்கே ஆளாதலின், “பந்த மட்டினாம் பவப் பெருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்” என்று பகர்கின்றார். பந்தத்தின் நீங்கற்குரிய நினைவுகளை எண்ணாமையால் “பாவி நெஞ்சகம்” என நொந்து கூறுகின்றார். காரண காரியத் தொடர்ச்சியாய் கரையாகிய முடிவின்றி யிருத்தலால் “பவப்பெருங் கடல்” என்று கூறுகின்றார். “பிறவிப் பெருங்கடல்” என்று திருவள்ளுவர் முதலிய சான்றோர்களும் கூறுவர். இறைவன் திருவருளாலன்றிக் கரை காணமாட்டாத பெருமை யுடையதாதலால் “பெருங்கடல்” எனப்படுகிறது எனினும் அமையும். “பந்த பாசம் அறுத்தெனை யாட்கொண்ட மைந்தன்” (கடுவாய்) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. பன்னெடுங் காலம் பல்வகைப் பிறப்பிறப்புக்களில் அகப்பட்டு வருந்தி அயர்த்தமை புலப்பட, “இந்த மட்டில் உழன்றதே யமையும் ஏற வேண்டும்” என முறையிடுகின்றார். “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்” (சிவபு) என மணிவாசகரும் உரைப்பது காண்க. பந்த முற்றுப் பவப் பெருங்கடலில் கிடந்து வருந்துவதும், அதனினின்றும் வீடுற்றுக் கரை யேறுவதும் சிவத்தின் திருவருளாலாவ தாகலின், “உன் எண்ணமே தறியேன்” என்று இசைக்கின்றார். “பந்தம் வீடவையாய பராபரன்” (ஆருர்) எனப் பெரியோர் உரைப்ப தறிக. பிறப் பிறப்புக்களின் நலமின்மை யுணர்தலே நல்லறம் என்று புத்தர் முதலியோர் கூறுவதை நினைந்து, “அந்த மட்டினில் இருத்தியோ” என்று கேட்கின்றார். “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும் பேரின்பம்; பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது” (மணி. 2 : 64 - 7) என்பது புத்த நூல். அஃது அமையாது; சிவத்தின் திருவருட் டுணைதான் பிறவாப் பேரின்பத்தை நிலையாக நல்குவது எனச் சிவஞானச் செல்வர்கள் தெரிவித்தலால், “அடிமை வேண்டி நின் அருட்பெரும் புணையை உந்த மட்டினால் தருதியோ உரையாய்” என உரைக்கின்றார். “பிறத்தலும் பிறந்தாற் பிணிப்பட வாய்ந்தசைந் துடலம் புகுந்து நின் றிறக்குமாறுளதே இழித்தேன் பிறப்பினை நான்” (ஆரூர்) என்றும், “சிற்றின்பம் துப்பனென்னாது அருளே துணையாக ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற் றப்பர்” (சோற்றுத்) என்றும் சமய குரவர்கள் அறிவுறுத்தவது காண்க. அடியார் அடிமையை மிகவும் விரும்புவது சிவத்தின் செயலாதலால் “அடிமை வேண்டி” எனக் குறித்துரைக்கின்றார். “வஞ்சகப் புலையனேனை வழியறத் தொண்டிற் பூட்டி, அஞ்ச லென் றாண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை யன்றே” (தனி. நேரிசை) என்று திருநாவுக்கரசரும், “வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்” (திருவாசக. குழைத்த) என்று மணிவாசகனாரும் எடுத்தோதுவது காண்க.
இதனால், பிறவிப் பெருங்கடலி னின்றும் கரையேறி யுய்தற்குச் சிவத்தின் அருட்டுணை வேண்டி இரங்கியவாறாம். (7)
|