1116.

     ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
          ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
     ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
          அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
     வான மேவிய அமரரும் அயனும்
          மாலும் என்முனம் வலியிலர் அன்றே
     ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
          ஒற்றி மேவிய உலகுடை யோனே.

உரை:

     திருவொற்றியூர்க்கண் வீற்றிருக்கும் உலகெலா முடைய பெருமானே, ஊனம் நீக்கி நல்லருள் வழங்கும் சிவபரம் பொருளே, ஞானம் எனப்படும் சொல்லிற்குற்ற பொருளை யறியேன்; ஏனெனில் யான் ஞானமுடையவனல்லன்; ஆயினும், யான் கடையனானாலும் நின்னுடைய திருவருளில் ஓர் அணுவிற் பாதியளவே எனக்குக் கிடைப்பதாயினும், அதனைப் பெறுவேனாயின், வானுலகத்து வாழும் தேவர்களும் பிரமனும் திருமாலும் எனக்குமுன்னே வலியில்லாதவராவர். எ.று.

     ஞானம் அறிவொளியாதலால், அதற்கு நேர் மாறாய அறியாமையிருள் ஊனம் எனப்படுகிறது. “ஊனத் திருள் நீங்கிட வேண்டின், ஞானப் பொருள் கொண்டடி பேணும்” (மயிலாடு) என்பர் ஞானசம்பந்தர். நல்லருள் - நன்ஞானம்; திருவருள் ஞானம். ”என்னை ஞானத்திருளறுத் தாண்டவன்” (தனிக். குறுந்) என்று நாவுக்கரசர் கூறுதலால், “ஊனம் நீக்கி நல்லருள் தரும் பொருளே” என்று இயம்புகின்றார். ஞான மென்பது பல் பொருளறிவைக் குறிக்கும் பொதுச் சொல்லாதலால், “ஞானம் என்பதின் உறுபொருள் அறியேன்” என்றும், பரஞானம் அபரஞான மெனவும், சிவஞானம் பவஞான மெனவும், கலை ஞானம் அனுபவஞானம் எனவும் ஞானம் பல திறப்படுதலின், “ஞானி யல்லன்” என்றும் எடுத்துரைக்கின்றார். ஞானக் குறை பற்றித் தம்மைக் “கடையேன்” என வள்ளலார் குறிக்கின்றார். பல்வகை ஞானமில்லாத வனாயினும் திருவருளுணர்வுடையேன் என்பது புலப்பட, “ஆன போதிலும்” என வுரைத்து, அருள் நல்குக என்னும் வேண்டுகோளைக் குறிப்பாய்த் தெரிவிக்கின்றார். திருவருள் முழுதும் நல்கா தொழியினும் ஓர் அணுவிற் பாதியளவேனும் தருக; தரப்பெறின் யான் திருமால் முதலிய தேவர் பலரினும் மேன்மை யுறுவேன் என்பாராய், “எனக்கு நின் அருள் ஓர் அணுவிற் பாதியே யாயினும் அடைந்தால் வான மேவிய அமரரும் அயனும் மாலும் என்முனம் வலியிலர் அன்றே” என்று இயம்புகின்றார்.

     இதனால், ஞானியில்லேனாயினும் திருவருள் உணர்வுடையேனாதலின், அருளில் அணுவிற் பாதி கிடைக்குமாயினும் தேவ தேவர்கட்கு மேலாவன் என்று தெரிவித்தவாறு.

     (8)