1118. நாக நாட்டதின் நலம்பெற வேண்டேன்
நரகில் ஏகென நவிலினும் அமைவேன்
ஆகம் நாட்டிடை விடுகெனில் விடுவேன்
அல்லல் ஆம்பவம் அடைஎனில் அடைவேன்
தாகம் நாட்டிய மயல்அற அருள்நீர்
தருதல் இல்எனச் சாற்றிடில் தரியேன்
ஓகை நாட்டிய யோகியர் பரவும்
ஒற்றி மேவிய உலகுடை யோனே.
உரை: உவகை நல்கும் யோகியர் வழிபடும் ஒற்றியூர் மேவிய உலகெலாமுடைய பெருமானே, இந்திரன் முதலியோரது தேவருலகத்து இன்பம் பெறவும் விரும்பேன்; நரகத்துச் செல்க என்றாலும் அமைந் தொழிவேன்; உடல் வாழ்வை மண்ணோடே யொழிக என்றாலும் விடுவேன்; துன்பம் பொருந்திய பிறப்பை அடைக என்றாலும் அடைவேன்; வேட்கை நிலைபெற்ற மயக்கம் கெடுமாறு திருவருளாகிய நீரைத் தருவதில்லை என்பாயாயின் உயிர் வாழேன். எ.று.
நாக நாடு - விண்ணுலகத்து இந்திரன் முதலிய தேவருலகம். நல் வினை செய்தவர் எய்தி இன்பம் நுகரும் நாடு என்று அதனைக் கூறுவர். “நாக நீணகரொடு நாக நாடதனொடு போகநீள் புகழ்” (சிலப்.) என்றதற்குப் பழைய வுரைகாரர், “நாகருலகத்துடனும் தேவருலகத்துடன் போகம் நீள் புகழ்” எனப் பொருள் கூறுவது காண்க. தேவருலகத்து வாழ்வையும் நரகவாழ்வையும் விரும்பாமையை மணிவாசகனார், “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு” எனவும், “நரகம் புகினும் திருவருளாலே இருக்கப் பெறின் எள்ளேன்” எனவும், (சதக) கூறுவது காண்க. சுந்தரர் உடம்போடு கயிலை சென்றது போலும் சிறப்பின்றி இறப்பது தாழ்வெனக் கருதுதலின், “ஆகம் நாட்டினில் விடுக எனில் விடுவேன்” என்றும், இன்பத்தினும் துன்பம் மிக்கதாகலின், பிறவியை, “அல்லலாம் பவம்” என்றும் இயம்புகின்றார். பொருளல்ல வற்றைப் பொருள் என்று உணரும் மயக்கத்தால் உண்டாகும் ஐம்புல வேட்கையைத் “தாகம் நாட்டிய மயல்” என்றும், அது திருவருளாகிய நீராலன்றித் தீராதென்பது தோன்ற, “அருள்நீர்” என்றும் இசைக்கின்றார். “தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத் தந்துய்யக் கொள்ளாய், அழங்குகின்றேன்” (அடைக்) என வாதவூரடிகள் உரைப்பது காண்க. திருவருளே கருதி வாழ்கின்ற எனக்கு அதனை மறுத்தால் வாழ்வில்லை என்பார், “இல்லெனச் சாற்றிடில் தரியேன்” என்று சாற்றுகின்றார். உடம்பினுள் ஓடும் மூச்சினை யடக்கி மூலநெருப்பால் குண்டலியை எழுப்பித் துவாத சாந்தத்தில் ஞானக்கண் கொண்டு ஆங்கு ஊறும் அமுதுண்டு சிவத்தைக் கண்டுறுவது சிவயோகியர் செயலாதலால் அந்நிலையில் அவர் முகத்தில் உவகை பூத்து ஒளிர்வதுபற்றி, “ஓகை நாட்டிய யோகியர்” என்றும், அகத்தே கண்டு களித்த சிவத்தை, புறத்தேயும் கண்டு வழிபடுவதால், “யோகியர் பரவும் ஒற்றி” என்றும் இயம்புகின்றார். “ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினையேற்றி நன்புலத் தேனை வழிதிறந் தேத்துவார்” (பொது) என ஞானசம்பந்தர் சிவயோகியரைச் சிறப்பிப்பது காண்க.
இதனால், மண்ணகத்து உடல் வாழ்வின் மயக்கம் விளைவிக்கும் வேட்கைதணிதற் பொருட்டுத் திருவருளாகிய நீர் வேண்டியவாறாம். (10)
|