112. மின்னாளும் இடை மடவார் அல்குலாய
வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தே னல்லால்
எந்நாளு முனைப் போற்றி யறியே னென்னே
ஏழைமதி கொண்டேனிங் கென்செய்கேனே
அன்னாயென் னப்பாவென் றரற்று மன்பர்க்
காரமுதே யருட்கடலே யமரர் கோவே
தன்னார் வத்தமர் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: தனக்குரிய மிக்க அன்புடன் தணிகை மலையில் வீற்றிருக்கும் மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, அம்மா, அப்பா என்று அழுது போற்றும் மெய்யன்பர்க்கு நிறைந்த அமுதாகியவனே, அருட்கடலே, தேவர்கள் தலைவனே, மின் போல் நுடங்கும் இடையினையுடைய மகளிரது அல்குற்றட மென்னும் வெவ்விய குழியில் வீழ்ந்து அழுந்தி மெலிவுற்றேனே யன்றி என்றும் உன்னைப் பரவினேனில்லை; அவ்வாறாகச் சிற்றறிவுடைய யான் இவ்வுலகில் இப்பொழுது என்ன செய்வேன்? எ. று.
முருகப் பெருமானே மிக்க ஆர்வமுடன் திருத்தணிகையில் வீற்றிருக்கின்றான் என்ற குறிப்புப் புலப்படத் “தன்னார்வத் தமர் தணிகை” எனக் கூறுகின்றார். பேரன்புடையார்க் கன்றி இறைவனையே தமக்குத் தாயும் தந்தையுமாகக் கருதும் உணர்வுண்டாகா தாகலின், அப்பெருமக்களை, “அன்னாய் என் அப்பா என்று அரற்றும் அன்பர்” என்றும், அவ்வாறு அரற்றுவார்க்கு உள்ளதில் ஊறாத அமுதூறி யின்புறுத்தலால் “அன்பர்க்கு ஆரமுதே” என்றும் எடுத்துரைக்கின்றார். மகளிரிடைப் பெறலாகும் காமக் கூட்டம் நாளடைவில் உடலை மெலிவித்து மன வலியைக் கரைத்து விடுவதால், “மின்னாளும் இடை மடவார் அல்குலாய வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன்” என விளம்புகின்றார். ஏனைக் குழிகள் தங்கண் வீழ்ந்தார் மனத்தின் கண் வெறுப்பை விளைவித்து மீண்டும் வீழாமை நினைவைத் தருதல் போலாது மேன் மேலும் வீழ்தற்கு விருப்பம் தந்து கெடுத்தலின், “அல்குலாய வெங்குழி” என்று கூறுகிறார். போற்றி யறியேன் என்பது ஒரு சொல்லாய்ப் போற்றுதல் செய்திலேன் என்பது பட நின்றது. போற்றாமைக் கேது அறிவின்மை என்பார், “ஏழைமதி கொண்டேன்” என வுரைக்கின்றார்.
இதனால் மகளிரது காமக் கூட்ட விருப்பால் முருகனைப் பரவா தொழிந்தமை கூறி வருந்தியவாறாம். (10)
|