1120.

     செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
          திருப்பும் என்தனைத் திருப்புகின் றனைநீ
     பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
          பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
     வைத போதினும் வாழ்த்தென நினைத்து
          மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
     கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
          கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.

உரை:

     கோடிய நெறிப்பட்ட நெஞ்சமே, செய்யப்பட்ட நன்றியை மறந்து செய்தார்க்குத் தீங்குசெய்பவர்போல நன்னெறிக்கட் செலுத்தும் என்னையே நீ தீநெறிக்கண் திருப்புகின்றாய்; கலத்தின்கண் பெய்த ஆன்பாலை மண்வெடிப்பின்கட் சொரியும் பேதையாதலால், நீ நன்னெறி யினின்றும் தவறிச் செல்கின்றாய்; உன்னை நான் கடுஞ்சொற்களால் வைதாலும், அதனை வாழ்த்தாக எண்ணி, அவற்றைப் பொருளாக மதியாமல் மறுத்துத் தீநெறியிலேயே நடக்கின்றாய்; தழை கொய்து மழித்த கொம்பினை நட்டு வளர்க்க முயல்கின்றாய்; நீ மடிந்தொழிகின்றாயில்லையே. எ.று.

     கொடிய நெஞ்சம் - கொடுமையுடைய நெஞ்சம்; கொடுமையாவது நெறி கோடுதல். “நன்றி மறப்பது நன்றன்று” என்ப சான்றோர். மறப்பதோடு நில்லாமல் நன்றிக்கு மாறாகத் தீங்கு செய்யும் கொடியவர் போல என்றற்குச் “செய்த நன்றிமேல் தீங்கு இழைப்பாரின்” என்றும், என்னைத் தீநெறிக்கண் திரும்பித் தீங்கு செய்கின்றாய் என்பாராய், “தீங்கிழைப்பாரின் திருப்புகின்றனை” என்றும், “நன்றி கொன்றார்க்கு உய்வில்லை” என வற்புறுத்தியபோதும் என்வழித் திரும்பாமல் என்னைத் தீநெறியிற் செலுத்துகின்றாய் என்றற்குத் “திருப்பும் என்றனைத் திருப்புகின்றனை நீ” என்றும் கடிந்துரைக்கின்றார். செய்த நன்றி நெஞ்சின்கண் நிற்கவும், அதனைப் புறக்கணித்துப் பிழை செய்தொழிவது, “பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும் பேதையின் செயல்” என்று விளக்குகிறார். கமர் - களிப்பு நிலத்திற் காணப்படும் வெடிப்பு. நன்னெறியைக் கைவிட்டுத் தீநெறிக்கண் நெஞ்சு செல்வதற்குக் காரணம் கண்டருளிய வள்ளற் பெருமான் “பேதையாதலின் பிறழ்ந்தனை” என்று தேற்றி, அதன் தவறுடைச் செயலை எடுத்துக் காட்டினால் திருந்துமெனக் கருதி, “உனைநான் வைத போதினும் வாழ்த்தென நினைத்து மறுத்து நீக்கி அல்வழி நடக்கின்றாய்” என வுரைக்கின்றார். அவரது அன்புள்ளத்தில் வெம்மை தோன்றுகிறதில்லை. நெஞ்சினது தெளியமாட்டாத புன்மை நிலையை எண்ணிய வள்ளற் பெருமான், நெஞ்சமே, கொய்துமழித்த கொம்பினை நட்டு வளர்க்கும் மூடர் இனத்தை நீ சேர்க்கின்றாய் என்பாராய், “கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்” என்றும், கொடுமைத் தன்மையால் ஏவவும் செய்யாது தானும் தேறாது இருப்பதொன்று இறக்குமளவும் மக்களினத்துக்கு நோய் என்று திருவள்ளுவர் கூறுவதை நினைந்து “மடிய கிற்றிலையே” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், தற்கொலை தீதாயினும் இந்நெஞ்சு போன்றார் அது செய்வது சமுதாயத்துக்கு நன்று என்றவாறாம்.

     (2)