1121.

     இலைஎ னாதணு வளவும்ஒன் றிய
          எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
     கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
          கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
     தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
          தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
     புலையி னார்கள்பால் போதியோ வீணில்
          போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.

உரை:

     நெஞ்சமே, இரப்பவர்க்கு இல்லையென்னாமல் அணுவளவும் ஒன்று ஈவதற்கு எண்ணுகின்றாயில்லை; இதனால் நீ பெறப்போவது யாதாம்? கொலைத் தொழில் துன்பமானது என்று அறிகின்றாயில்லை; உயிர்களைக் கொல்லுகின்ற அக் கூற்றினும் கொடுமை மிக்குள்ளாய்; தலையிலிருந்து அடிகாறும் மாலைதாழ அணிந்த சடையையுடைய பெருமானாகிய சிவனுடைய திருவடியை நினையாமல், உணவையே எண்ணி உலகில் வாழும் புலைத்தொழிலாளர் திரிவதுபோல வீணெறியிற் போய்ப் போய் அப் போக்கிலேயே வீழ்ந்தழியப் போகின்றாயோ? அறிகிலேன். எ.று.

     ‘இலன்’ என்கிற எவ்வச் சொல் சொல்லாமல் உதவும் பண்பு உயர்ந்தோர்க்கே யுண்மையின், நெஞ்சின் கீழ்மைத் தன்மை சுட்டற்கு “இலையெனாது அணுவளவும் ஒன்று ஈய எண்ணுகின்றிலை” என்றும், அச்செயல் அவர்க்குப் புகழ் நல்காமை பற்றி, “என் பெறுவாயோ” என்றும் இயம்புகின்றார். “ஒன்றாக நல்லது கொல்லாமை” (குறள்) என்று திருவள்ளுவர் உரைத்தலின், “கொலை இன்னாது என அறிந்திலை” என்றும், கொல்லுதலையே தனக்குத் தொழிலாக வுடையது கூற்று; அதுதானும் தன் தொழிலைக் காலம் பார்த்துச் செய்யும்; நீ அதனையும் நோக்குவதிலை என்பாராய், “கொல்லுகின்ற அக்கூற்றினும் கொடியாய்” என்றும் கூறுகின்றார். தலையிலிருந்து அடிகாறும் கிடந்து புரளுமாறு மாலையணித லுண்மையின் “தலையின் மாலை தாழ் பெருமான்” என்கின்றார். இனி, தலைமாலை மார்பில் தாழ அணிந்த பெருமானே எனினும் அமையும். புலையர் - புலாலுணவு கொள்பவர். “பொல்லாப் புலாலை நுகரும் புலையர்” (திருமந்) என்று திருமூலர் உரைப்பது காண்க. இறைவனையோ அறத்தையோ நினையாமல் ஊனுணவு ஒன்றே வேண்டிப் பகல் முற்றும் அலைவர்; அவர்போல் அலைகின்றமை பற்றி “சிவன் தாணினைந்திலை ஊண் நினைந்துலகில் புலையினார்கள்பால் போதியோ” என்றும், போக்கு வீண் போக்காய் நின்னை அழிக்கும் என்பாராய், “வீணில் போகப் போக இப்போக்கினில் அழிந்தே” என்றும் இயம்புகின்றார்.

     இதன்கண், ஈயாமை, கொலைத்தன்மை, புலைத்தன்மை ஆகியன வுண்மை கூறி நெஞ்சினைத் தெருட்டுதல் காணலாம்.

     (3)