1123. தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
தேனை மெய்அருள் திருவினை அடியர்
ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
மானை அம்பல வாணனை நினையாய்
வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
உரை: பூக்களில் ஊறும் தேனாகிய நெய் விரவிய சிவந்த சடையையுடைய கனிபோல்பவனும், மெய்யருளை நல்கும் செல்வமானவனும், அடியார்களின் ஊன் நெகிழ்ந்து உருகுவித்த ஒளியானவனும், உள்ளத் தெழுந்தோங்கும் இன்பப் பொருளாயவனும், பிரமன் முதலிய மூவர்க்கும் தலைவனாயவனும், அழகுருவாகியவனும், மேருமலையை வில்லாக உடையவனும், ஆனந்தம் நல்கும் கொழுவிய கடலிடத் தெழுந்த அமுதமாகியவனும், எங்கள் தலைவனும், அம்பலவாணனுமாகிய சிவபெருமானை நினையாமல், வஞ்ச எண்ணங்களையுடைய நெஞ்சமே, இன்னும் ஏனோ மாய்ந்தொழியா திருக்கின்றாய். எ.று.
சிவந்த சடையும் கனிந்த நெஞ்சமும் உடையனாதல் கண்டு “செஞ்சடைக் கனி” என்று புகழ்கின்றார். தேனெய் விரவியிருத்தல் சிவனது செஞ்சடைக்கியல்பு; “தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெருமான் திடம்” (கச்சியநேக) என்று நம்பியாரூரர் பாடிப் பரவுவர். உலகியற் போக போக்கியங்களை மறைத்துச் சிவத்தின் மெய்யருளை நுகர்விப்பதும், மெய்யருளை மறைத்து உலகியற் போகங்களை நுகர்விப்பதும் சிவத்தின் திருவருளின் செயலாகும். அந்நிலையில் திருவருளைக் கொண்டு மெய்யருணல்கும் சிவபோகத்தை எய்துவிப்பது பற்றிச் சிவனை “மெய்யருள் திருவினை” என்று சிறப்பிக்கின்றார். அடியார்களின் ஊனுடல் உருகி உணர்வு பெருகுமிடத்துச் சிவத்தின் பேரொளி தோன்றி மிக்க இன்பம் நல்குவது கண்டு, “ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை” என்கின்றார். மணிவாசகப் பெருமான்; ஊனினை யுருக்கி யுள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்த” (பிடித்த) என்பர். உள்ளொளிப் பெருகத் தோன்றிய உலப்பிலா ஆனந்தத்தை இங்கே வள்ளலார் “உள்ளத் தோங்கிய உவப்பினை” என்று உரைக்கின்றார். சிவனை, “மூவர்கோனாய் நின்ற முதல்வன்” என மணிவாசகர் முதலிய சான்றோர் பரவுதலால், “மூவர் கோன்” என்று இசைக்கின்றார். வற்றாத பேரின்பக் கடல் என்றற்கு “ஆனந்தக் கொழுங்கடல்” எனவும், அக் கடலிடத்தேயும் அதற்குக் கரையாயும் காணப்படுதலின் “கொழுங்கடல் அமுதை” எனவும் கூறுகின்றார். தோற்றக் கேடும் இளமையும் மூப்பும் இல்லானாதலின் “கோமளம்” என்கின்றார். உடனிருந்து நினைவன நினைதற்குதவுவது, தொடர்ந்து வேறு நெறியில் மாற்றி எடுத்ததை விடுத்து ஏதிலா வொன்றிற் சென்று முடிப்பது பற்றி, “வஞ்ச நெஞ்சமே” என்றும், நெஞ்சின் சேட்டையடங்குவது அதற்கு மாய்வதாமாதலின், “இன்னும் மாய்ந்திலையே” என்றும் இசைக்கின்றார்.
இதன்கண், சிவபரம்பொருளை நினையவிடாது வேறு நெறியில் செலுத்தும் நெஞ்சினை நொந்து கொள்வது காணலாம். (5)
|