1124.

     இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ
          ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான்
     முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை
          முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண்
     என்னை நீஎனக் குறுதுணை அந்தோ
          என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில்
     மன்னு நம்முடை வள்ளலை நினைத்தால்
          மற்று நாம்பிற வாவகை வருமே.

உரை:

     ஏழைமையுடைய என் நெஞ்சே, இங்குமங்குமாக இன்னமும் எவ்வாறுதான் அலைகின்றாயோ? முன்னைப் பிறப்புக்களில் நாம் உலகிற் பிறந்து இறந்து உழன்றபோது பட்ட துயரத்தை எண்ணிப் பார்த்தால், அவைகள் என் குலையை முறுக்குகின்றனவே; எனக்கு நீ உறுதுணையென்பது என்னை? ஐயோ, நீ என் சொல்லை ஏற்கின்றாயில்லை; அழகு கொண்ட தில்லைப் பொதுவில் விளங்கும் கூத்தாடும் வள்ளற் பெருமானை நினைத்தால் நமக்குப் பிறவாப் பெருநிலை யுண்டாகும். எ.று.

     நாடோறும் கணந்தோறும் இங்கும் அங்கும் எங்குமாக அலைகின்றமை பற்றி, “இன்னும் எங்ஙனம் ஏகுகின்றனையோ” என்று கேட்கின்றார். ஏழைமை - அறிவின்மை. பிறந்தோர் இறத்தலையும் மக்கள் பிறத்தலையும் காணும்போது அவர்கள் படும் துன்பம் நாம் முன்னைப் பிறவிகளிற் பட்டன என்பதை நினைக்கும்போது குலை நடுங்குவதை நினைந்து மொழிதலின், “முன்னை நாம் பிறந்துழன்றவத் துயரை முன்னில் என்குலை முறுக்குகின்றன காண்” என்கின்றார். இவ்வுடலைப் படைத்து இதற்குள் என்னைச் செலுத்தி வாழ்வித்த இறைவன் எனக்கு உறுதுணையாக வைத்தனனாக நீ துணையாகின்றாயில்லையே என்பார், “என்னை நீ எனக்குறு துணை அந்தோ” என இரங்குகின்றார். சொல்லை ஏலாமை உறுதுணை யாகாமைக் கேதுவாயிற்று. மன்றாடும் பெருமான் திருவடியை நினைத்தால் பிறவியரும் என்றற்கு “நாம் பிறவா வகை வருமே” என்று கூறுகின்றார்.

     இதன்கண், பல நினைந்து இங்குமங்கும் அலைந்து உழத்தலின் அம்பலவாணன் திருவடியை நினைந்தால் பிறவியறும் என்று நெஞ்சிற் கறிவுறுத்தவாறு.

     (6)