1125. பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
பிள்ளை ஆகிய பெருந்தொடக் குழந்தே
இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
உரை: நெஞ்சமே, முற்பிறவிகளில் நாம் இவ்வுலகிற் பிறந்து மனைவி மக்கள் முதலாக வருகின்ற பெரிய தொடக்குண்டு வருந்தி இறந்து, பின்பு எய்திய பிறப்புக்களிடையே பிறந்து கிடந்து துன்புற்று, அப்பிறப்பில் எஞ்சியிருந்த துயர் வகையெல்லாம் உனக்கென மதியில்லாமையால் நீதான் மறந்துவிட்டாய்; எளியனாகிய யான் மறக்கவில்லை. இவ்வுலகியல் தொடர்புகளைவிட்டு நாம் பெறத் தகும் சுகத்தை யடைதற்கு நான் சொல்வதுபோலச் செய்யத் தொடங்குவாயாயின், அது நன்றாம். எ.று.
முன்னர் - முற்பிறப்புக்களை. பெண்டு, மனைவி, பெண்டுபிள்ளைகளின் தொடர்பு சங்கிலிபோற் பிணிப்பதாகலின், “பெருந் தொடக்கு” என்று கூறுகின்றார். நீக்கற்கரிய தொடர்பு என்றற்குப் “பெருந்தொடக்” கெனப்படுகிறது. “ஓடியுய்தலும் கூடும்மன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” (புறம்) என்பர் சான்றோர். தொடக்குண்டு வாழ்ந்து இறந்து பின்னரும் பிறப்பு அறாமையால் பல பிறவிகள் எய்தினமை குறித்தற்கு, “இறந்து வீழ்கதி யிடை விழுந்துழன்று” என்றும், எய்திய பிறப்புக்கள் பல்வகை யாதலின் பொதுப்பட, “கதி” என்றும், உயிர் நீங்கும் காலத்து விரும்பப் பட்ட, பிறப்பே வரும் என்பவாகலின், “வீழ்கதி” என்றும், கதி எத்தகைய தாயினும் அதன்கண் நுகர்வது துன்பமே என்பது புலப்பட, “உழன்று” என்றும் இயம்புன்றார். பிறவி தோறும் நுகர்ந்து கழிக்கப்படாது நின்ற வினைப் போகம் “இருந்த சேடம்” என்றும், அதற்கேற்பப் பிறந்துழன்ற நீ இப்போதும் அச்சேடத்தால் முன்னைய பிறவித் துன்பமனைத்தையும் மறந்தொழிந்தாய் என்பார், “இத்தனை யெல்லாம் மறந்து விட்டனை” என்றும் கூறுகின்றார். சேடம் - கழிந்தது போக நிற்கும் எச்சம்; மிச்சமென வழங்குவதும் இதுவே. முற்பிறப்பின் இறுதியில் நின்ற சேடம் வரும் பிறப்பில் துன்பம் இன்பம் என்ற பயன்வடிவில் வருதலால் மறக்கப்படும். “சாதலஞ்சேன் அஞ்சுவல் சாவின், பிறப்புப் பிறிதாகுவதாயின் மறக்குவென் கொல்லென் காதலனெனவே” (நற்) என்று சங்கச் சான்றோரும், “பிறப்பன் பிறையணி வார் சடைப் பிஞ்ஞகன் பேர், மறப்பன் கொலோ என்றென் உள்ளம் கிடந்து மறுகிடுமெ” (தனி) என்று நாவுக்கரசரும் உரைப்பது காண்க. நெஞ்சுக்கெனத் தனியுணர் வின்மையின் “மதியிலாய்” எனவும், யான் மதியுடையேன் என்றல் சீலமன்மையின், காரியத்தின் மேல்வைத்து, “மறந்திலன் எளியேன்” எனவும் இசைக்கின்றார். பெண்டுபிள்ளையாகிய தொடக்கும், வினைப் போகமும், நாம் பெறற்குரிய சுகத்தைப் பெறுதற்குத் துணையும் கருவியுமாய் அமைந்தனவாதலால், வேண்டாதபோது விலக்குதலே வேண்டுவதென வற்புறுத்தற்குத் “துறந்து நாம் பெறும் சுகத்தினை யடைய” என்று குறிப்பாய் விளக்குகின்றார்.
இதனால், பிறந்த பிறப்பில் பெறுவனவற்றைத் துறந்து நாம் பெறும் சுகத்தினை அடைய வந்த துணையும் கருவியும் பயனுமாகக் கருத வேண்டுமென்பது குறிப்பாய் உணர்த்தியவாறு. (7)
|