1126. நன்று செய்வதற் குடன்படு வாயேல்
நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம்
இன்று செய்திநீ நாளைஎன் பாயேல்
இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே
ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர்
உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
அன்று முன்னரே கடந்தனர் அன்றி
அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.
உரை: நன்மை விரும்பும் நெஞ்சமே, அறம் செய்தற்கு இசைவாயாயின் இன்று, இவ்வண்ணம் வல்லவாறு செய்க; நாளைச் செய்வோம் என்று தள்ளுவாயாயின், இன்றிருந்தவர் நாளை இருப்ப ரென்றற்கில்லை; ஒரு செய்தி சொல்லுகிறேன்; கேள்; சுகப்பிரமம் என்ற முனிவர் முதலியோர் பிறந்த அக்கணத்தேயே சட்டெனத் துறவு பூண்டனர். அந்நாளில் முற்பிறப்பிலேயே அவர் பிறவிக் கடலைக் கடந்திருந்தனர்; கடத்தற்கு முன்னரே அதற்கேதுவாகிய தொடர்பினின்றும் நீங்கினர் காண். எ.று.
நன்று - அறம்; ஈண்டுத் துறவின் மேற்று. நுகர்ந்து கொண்டிருக்கும் இம்மையின்பத்தைத் துறப்பதென்பது அரிய செயலாதலால், அவ்வருமை தோன்ற “நன்று செய்வதற் குடன் படுவாயேல்” என்றும், நன்னெறிக் கண் அறிவு சென்றாலொழிய அதனைச் செய்தற்கு உடன்பாடு தோன்றாமைகண்டு “நல்ல நெஞ்சமே” எனப் புகழ்ந்தும், உனக்கு இயன்ற அளவு செய்க என்பாராய் “வல்ல” என்று சிறப்பித்தும், இன்றே இவ்வாறு செய்க என அறிவுறுத்தலுற்று “இவ்வண்ணம் இன்று செய்தி நீ” என்றும் உரைக்கின்றார். இன்றே செய்க என வற்புறுத்தற் கேது கூறுவாராய், “நாளை யென்பாயேல் இன்றிருந்தவர் நாளை நின்றிலரே” என்று கூறி, ஏதுவோடு எடுத்துக் காட்டும் வேண்டுவோர்க்கு, “ஒன்று கேண்மதி; சுகர்முதல் முனிவர் உக்க வக்கணம் சிக்கெனத் துறந்தார்” என்று உரைக்கின்றார். உகுதல் - உள்ளத்தில் துறவுணர்வு தோன்றுதல். பிறந்த மாத்திரையே துறவு கைகூடுவதற்குக் காரணம், முற்பிறவியில் எல்லாம் முற்றியிருந்தன; பிறவி நோய் ஒன்று தடையாய் நின்றது; அது நுகரப்பட்டதும் துறவு கைம்மேற் பயனாயிற்று என உணர்த்தற்கு “அன்று முன்னரே கடந்தனர்” என்றும், “பிறவிக் கேதுவாய வினைத் தொடர்பும் அப்போதே தீர்ந்தமை விளக்க, “அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே” என்றும் விளக்குகின்றார். வினைத் தீர்வால் சிவஞானமும் அதனால் வீடுபேறும் எய்தும் என்று சைவநூல்கள் கூறுவது காண்க.
இதன்கண், இன்றே வல்ல அளவு துறவறம் மேற் கொள்க என்று ஏது எடுத்துக் காட்டுக்களால் வற்புறுத்தியவாறாம். (8)
|