1127. அன்று னேர்கிலை நம்முடைப் பெருமான்
அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
உணர்கி லாய்வயிற் றுண்பொருட் டயலோர்
முன்றில் காத்தனை அவ்வள வேனும்
முயன்று காத்திலை முன்னவன் கோயில்
துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
தொடங்கு வானவர் தூயமுன் றிலையே
உரை: மனம் மாறுபட்டு நம்மையுடைய பெருமானாகிய சிவனை நினைக்கின்றா யில்லை; அவனுக்குரிய ஐந்தெழுத்து ஓதுவதையும் அடிக்கடி மறந்தொழிகின்றாய்; ஒன்றியிருந்து மேலாய சிவகதியை அடையும் நெறியை உள்ளத்திற் கொள்கின்றாயில்லை; ஐயோ, வயிற்றுணவுக்காக அயலாருடைய வாயிலில் எவ்வளவும் காத்து கிடக்கின்ற நீ, முன்னவனாகிய சிவன் திருக்கோயிலை யடைந்து நல்ல தொண்டர்கள் தொண்டு செய்யத் தொடங்குவதும் வானவர் வணங்குவதுமாகிய தூய முற்றத்தில் அவ்வளவு நேரமாயினும் காத்திருக்கின்றாயில்லையே; இதற்கு என் செய்வது. எ.று.
அன்றுதல் - மாறுபடுதல். “அன்றிய வமணர்கள் சாக்கியர்கள்” (வல்லம்) என ஞானசம்பந்தர் வழங்குவது காண்க. பெருமானை நேர்கிலை; ஐந்தெழுத்தையும் மறந்தாய் என இயையும். மனத்தைப் பரந்து செல்லவிடாது உயிரறிவோடு ஒன்ற நிறுத்தினால் உணர்வு கூரிய தாய் நுணுகிச் செல்லுமாகாலின், “ஒன்றிமேற் கதியுற உணர்கிலாய்” என உரைக்கின்றார். வகையுணர்கிலாய் என்றது, அதற்குரிய அறிவும் செயலும் நாடுகின்றாயில்லை என்பதாம். உணராமை குற்றமாதலால் “அந்தோ” என இரங்குதல் வேண்டிற்று. செவியூண் என வேறுண்மையின் வயிற்றூண் எனச் சிறப்பித்தது வெளிப்படை யணி; அணியாயினும், அஃது உணவின் இழிவுதோன்ற நின்றது. “அவ்வளவேனும்” என்பதனால் “எவ்வளவும்” என்பது வருவிக்கப்பட்டது. சிவன் திருக்கோயிலிற் காத்துக்கிடக்க மனம் எளிது செல்லாமை பற்றி “முயன்று காத்திலை” எனக் கூறுகின்றார். தொழும்பு - தொண்டு. தொழும்பு தொடங்கும் முன்றில், வானவர் வணங்கும் தூய முன்றில் என இயையும்.
இதனால், சிவ நினைவும் திருவைந்தெழுத் தோதுதலும் சிவன் கோயில் வழிபாடும் வற்புறுத்தப்படுவது காண்க. (9)
|