1128. தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
காய மாயமாம் கான்செறிந் துலவும்
கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
காய சோதிகண் டமருதல் அணியே.
உரை: தூய்மையுற்ற நெஞ்சே, மெய்யின்பமாகிய சுகம் பெற விரும்பினையானால் சொல்லுவோம்; ஆனால் அது சொல்லளவாய் நிற்பதன்று; உடம்பாகிய மாயக்காட்டில் செறிந்திருந்து உலாவுகின்ற ஐம்புலன்களாகிய கள்வரைக் கைவிட்டு, அதற்குமேல் பரந்துள்ள ஆணவமாகிய பகை கெடுமாறு வீழ்த்தி, இராப்பகலற்ற இலாடத் தானத்தே நின்று, நுண்ணிய ஆனந்தக் கூத்தினை இயற்றும் பரமாகாயமாகிய அதீததானத்தில், சிவசூரியனாகிய அருட்சோதியைக் கண்டு அங்ஙனமே அமர்ந்திருப்பது சுகமாம். எ.று.
உலகியற் காட்சிப்பொருளும் கருத்துப்பொருளும் இன்பமனைத்தும் சிறிது போதில் இனிமை குன்றிச் சோர்ந்து சிற்றின்பமாய்ப் பொய்யாதலின், “சுகமாவது மெய்யின்பம்” எனக் கோடல் வேண்டிற்று. இன்ப நுகர்ச்சி பொறி புலனுகர்ச்சிகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட தாகலின், “அது சொல்லளவன்று” என மொழிகின்றார். காயம் - உடம்பு; இது மாயா காரியமாதலால் “காய மாயமாம் கான்” என்று கூறுகின்றார். பொறிபுலன்களின் செயல் வகையனைத்தும் உடலின்கண் நிகழ்தலின், “காயமாம் கான் செறிந்துலவும் கள்வர் ஐவர்” என்றும் தன்னையடைந்த வுயிரை நீங்காமற் காதலித் துறையுமாறு மயக்கும் இயல்பிற்றாதலின் “காய மாயமாம் கான்” என்றும் சிறப்பிக்கின்றார். பொறி புலன்களைக் கைவிடுதல் என்பது, அடக்கி ஒரு நெறிப்படுத்துதல். ஒளிக்குள் இருந்து வாய்த்தவழி வெளிப்பட்டுப் பரவும் இருள்போல் உயிரறிவுக்குள் இருந்து மறைக்கும் மலவிருள், அறிவாற் சிறந்த உயிரைச் சுருக்கி அணுத் தன்மைப்படுத்தலின் அதனை ஆணவம் என்றும், மலம் என்றும், ஆணவவிருள், மலவிருள் என்றும் பெரியோர் கூறுவர். மலம் என்பது தான் முன்னையோர் மரபு. உயிரின் ஒளியாகிய அறிவையே பரந்து மூடி மறைத்துத் துன்பத்துக் குள்ளாக்குதலின் “மாய ஆணவப் பகை” எனப் பகர்கின்றார். பொறி புலன்களை நெறிப்படுத்து, உயிரை மேற் செலுத்திப் புருவநடுவே நிறுத்திச் சிவத்தை நினைப்பவர்க்கு அப் பெருமான் தோன்றி இன்பம் செய்கிறான் எனத் திருநாவுக்கரசர் கூறுகிறார். “பொறி புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை, நெறிப்படுத்து நினைப்பவர் சிந்தையுள், அறிப்புறும் அமுதாயவன்” (கச்சி) என்பது காண்க. புருவ நடுவில் சிவ சிந்தனை நிகழுங்கால், சிவன் அருட் சோதியாய்த் தோன்றுகிறான்; அருட்சோதி எழுங்காலை அதனைச் சுகப் பிரபை என்றும், அது தோன்றும் ஆகாயம் பூதாகாய மன்மையின், “பரமாகாயம்” என்றும் ஞான நூல்கள் கூறுகின்றன. சுகப்பிரபை தோன்ற அதன் நடுவே அருட்சோதியும், அதன் நடுவே கூத்தப் பெருமானும் காணப்படுதலை விளக்கம் செய்யலுறும் வள்ளற் பெருமான் “பகலிரா விலாப் பாங்கரின் நின்று ஆய ஆனந்தக் கூத்துடைப் பரமாகாய சோதி கண்டமருதல் அணி” என்று கூறுகிறார். மணிவாசகப் பெருமான், தாம் பெற்ற சுகானுபவத்தை “எனைநான் என்பதறியேன் பகல் இரவாவது மறியேன்” (உயிருண்ணி) என்று கூறுகின்றார். நுணுகி நோக்கி யறியப்படுதலால், “ஆய ஆனந்தக் கூத்து” எனவும், நிகழிடம் பரமாகாய மெனவும், காட்டுவது அருட்சோதி யெனவும் விளங்க, “கூத்துடைப் பரமாகாய சோதி” என்று உரைத்து, அதனைக் கண்டிருந்து இன்புறுதல் மெய்ச்சுகம் என்றற்கு “சோதி கண்டமருதல் அணியே” எனப் புகல்கின்றார்.
இதனால், சொல்லளவிற் கடங்காத மெய்ம்மைச் சுகம் தோன்றுமிடம் ஒருவாறு காட்டியவாறு. (10)
|