113. வன்சொலினா ரிடையடைந்து மாழ்கு மிந்த
மாபாவியேன் குறையை வகுத்து நாளும்
என்சொலினு மிரங்காம லந்தோ வாளா
இருக்கின்றாய் என்னே நின்னிரக்க மெந்தாய்
இன்சொலடி யவர்மகிழும் இன்பமே யுள்
இருளகற்றும் செழுஞ்சுடரே யெவர்க்கும் கோவே
தன் சொல்வளர் தருந்தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: தன் புகழ் தானே வளரும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்து விளங்கும் சகச வாழ்வே, இனிய சொற்களையே யுரைக்கும் அடியார்கள் பெற்று மகிழும் இன்பப் பொருளே, மக்கள் மனவிருளை நீக்குகின்ற செழுமையான ஒளிச் சுடராகியவனே, எவ்வகை யார்க்கும் தலைவனே, வன்சொற்களையே பேசும் மக்கள்பாற் சென்று மயங்கி வருந்துகின்ற பெரும் பாவியாகிய யான் என்னுடைய குறைகளை யெல்லாம் பலவகையால் எடுத்துரைக்கின்றே னாயினும் நீ சிறிதும் என்பால் இரக்கம் கொள்ளாமல் சும்மா இருக்கின்றாய்; உனது திருவுள்ளத்து இரக்கம் எத்தகையதோ, அறியேன், எ. று.
தன் சொல்-தனது புகழ்; தான் வழங்கும் ஞானவுரையே ஆணையாகச் சிறக்கும் தணிகைப் பதி என்றுமாம். திருவடியையே எப்போதும் நினைந்த வண்ணம் இருக்கும் அடியவர் வாயில் இன் சொற்களே பேசப்படுதல் விளங்க, “இன்சொல் அடியார்” எனவும், அவர் பெறுவதனைத்தும் ஞான வின்பமாதலால் “மகிழும் இன்பமே” எனவும், நினைப்பவர் நெஞ்சின்கண் எழுந்து அறிவொளி பரப்பி அறியாமை யிருளை நீக்குமாறு பற்றி, “உள்ளிருளகற்றும் செழுஞ்சுடரே” என்றும் சிறப்பிக்கின்றார். செழுமை-ஞான வளம். “அமுதே ஊறி நின்று என்னுள் எழுபரஞ்சோதி” (கோயில்) என்று திருவாசகம் உரைப்பது காண்க. மக்கள் தேவர் அன்பர் பகைவர் அயலவர் என்ற வேறுபாடின்றி யாவர்க்கும் காப்பளித்தலால் முருகப் பெருமானை “எவர்க்கும் கோவே” என இயம்புகின்றார். வன் சொற்களை யுரைப்பவர் மனம் வன்கண்மை மிக்கிருத்தலால் அவர்கள் எவரையும் தம்பால் நெருங்க விடாது வெருட்டித் துன்பம் செய்வராதலால், அவர்பால் செல்லுதல் கூடா தென்பர்; அதனை யெண்ணாமல்
சென்று அவர்களால் துன்புறுத்தப் பட்டமை புலப்பட, “வன்சொலினாரிடையடைந்து மாழ்கும் இந்த மாபாவி” எனத் தம்மையே பழிக்கின்றார் வடலூரடிகள். பாவத்தால் இயற்கை யறிவு மறைந் தொழிதலால் வன்சொற்களைக் கேட்கும் தெளிவுறாது சென்று வருந்தலால் மன மயக்க முற்றது பற்றி, “மாழ்கு மிந்த மாபாவி” என விளக்குகிறார். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” என்பது சிவ ஞான போதம். இறைவன் பாலன்றிப் பிறரிடத்தே ஒருவர் தமது குறைகளைச் சிறிதும் ஒளியாமல் உரைக்க முடியா தென்பது பற்றிப் பன்னாள் தமது குறையை வகுத்தும் விரித்தும் உரைத்தமை தோன்ற, “என் குறையை வகுத்து நாளும் என் சொலினும்” எனவும், அருள் விளக்கமும் ஆறுதலும் விரைவில் எய்தாமையால், “இரங்காமல் அந்தோ வாளா இருக்கின்றாய்” எனவும், உலகில் இரக்க முடைய பெரியவர்பால் காணப்படாமையால் உன்பால் காணப்படும் இவ்விரக்கப் பண்பு எத்தகைய தென என்னால் அறிய முடியவில்லை என்பாராய், “என்னே நின் இரக்கம் எந்தாய்” எனவும் எடுத்து மொழிகின்றார்.
இதன்கண் இறைவன் திருவருள் எளிதின் எய்தாமையால் வருந்திப் புகலுமாறு காணலாம். (11)
|