1132.

     இருக்க வாவுற உலகெலாம் உய்ய
          எடுத்த சேவடிக் கெள்ளள வேனும்
     உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன்
          ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே
     தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில்
          தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண்
     திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே
          தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

உரை:

     திருவுடைய கண்கள் மூன்றுடைய திருவொற்றியூரில் எழுந்தருளும் எம் பரம்பொருளே, தில்லையின்கண் ஓங்கி நிலவும் சிவானந்தமாகிய தேனை நல்கும் சிவபெருமானே, இருக்கு முதலிய வேதங்கள் காண்டற்கு விரும்பவும் உலகுயிர்கள் யாவும் உய்தி பெறவும் எடுத்தாடிய சிவந்த திருவடிக்கு அன்புற்று, எள்ளளவும் மனம் உருகுகின்றிலேன்; ஒதிமரம் போலப் பெருத்துள்ளேன்; ஒண்மை யெய்தியுள்ளேம் என்னும் வெண்மை யுடையேன்; தருக்கு மிக்கிருக்கும் என் தன்மையை நினைக்கும்போது தமியனாகிய எனக்கே தலை சுற்றுகிறது, காண். எ.று.

     கூத்தப் பிரானுடைய எடுத்த பாதம் இனிமை தருவ தென்ற கருத்துப்படச் சான்றோர், “இனித்தம்முடைய எடுத்த பொற்பாதம் காணப்பெற்றால்” வெறுத்தற்குரிய மனிதப் பிறவி தானும் விரும்பப் படுவதாம் என வுரைத்தலால், “எடுத்த சேவடி” என விதந்து கூறுகின்றார். திருவடியை எடுத்தது வேதங்கள் கண்டு பரவுதற்கும், உலகெல்லாம் பார்த்து உய்தி பெறற்கும் என்பார், “இருக்கு அவாவுற” என்றும், “உலகெலாம் உய்ய” என்றும் சொல்லி, “எடுத்த சேவடி” எனப் புகழ்கின்றார். “சிற்றம்பலத்து நட்டம் ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை யாட்கொண்டதே” (கோயில்) என்று நாவுக்கரசர் எடுத்த பாதத்தின் ஏற்றத்தை மிகவும் பரிந்துரைப்பது காண்க. அதன் பொருட்டு அன்பால் உருக வேண்டிய நெஞ்சம் அது செய்யாமைக்கு வருந்தி, “எள்ளளவேனும் உருக்க மொன்றிலேன்” என்றும் பருத்துப் பெருக்கினும் காழ்ப்பில்லதாதலால், “ஒதியினில் பெரியேன்” என்றும் இயம்புகின்றார். ஒதியினின் என்ற விடத்து இன் இரண்டனுள் முன்னது சாரியை; ஈற்றது ஒப்புப்பொருட்டாய் ஐந்தனுருபு. ஒண்மையுடைய மெனச் செருக்குவது வெண்மை என்பர். திருவள்ளுவர்; அதனைக் கருத்திற்கொண்டு, “ஒண்மை யெய்துதல் வெண்மை மற்றன்றே” என மொழிகின்றார். வெண்மை - வெளிற்றறிவு. தருக்குற்று நின்றேன் என்பது “தருக்க நின்ற என் தன்மை” என்றும், அஃது ஒருவர்க் கிருத்தலாகாத குற்றமாகலின், “நினைக்கில் தமியனேனுக்கே தலைநடுக்குறும் காண்” என்றும் சொல்லுகின்றார். அருளொழுகும் கண்களாதலின், “திருக்கண் மூன்று” எனச் சிறப்பிக்கின்றார்.

     இதன்கண், அம்பலத்தின்கண் ஆட எடுத்த பாதம் கண்டு உள்ளம் உருக வேண்டிய யான், அது செய்யாது ஒதிபோற் பெருத்தேன், வெண்மையும் தருக்கும் உடையனாயினேன் என்று கூறியவாறாம்.

     (4)