1134. பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம்
பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம்
தாதை நீஅவை எண்ணலை எளியேன்
தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய்
கோதை நீக்கிய முனிவர்கள் காணக்
கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே
தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான்
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
உரை: குற்றங்கள் தம்பால் இலவாகப் போக்கிய முனிவர்கள் காணும்படியாகத் திருக்கூத்தாடும் குணமே நிறைந்த பெரிய மலையே, தீது இல்லாத திருவொற்றியூரில் எழுந்தருளும் எங்கள் பெருமானே, தில்லைப் பதியின் உயர்ந்த சிவானந்தம் வழங்கும் தேனே, பேதைமை நிறைந்த நெஞ்சினையுடைய யான் செய்யும் பிழைகளை எடுத்துரைத்தால் இன்றும் மிகுதியாம் என மறுத்துப் பிணங்குதற் கிடமாகும்; எந்தையாகிய நீ அவற்றை எண்ணுதல் தவிர்க; எளியனாகிய எனக்கு உன்னுடைய சிறந்த தண்ணளியைப் புரிந்தருள்வாயாக. எ.று.
பேதைமை அறிவின்கண்ண தாயினும் அதனால் இயக்கப்படும்போது நெஞ்சு பிழையாவன நினைத்துக் குற்றப்படுதலின் “பேதை நெஞ்சினேன்” எனவும், பிழை மிகுதி யளவிடற் கரிது என்றும், அளந்த வழிச் செய்பிழை குறைவெனக் கருதி அளப்பாரிடையே கருத்து வேறுபாடு தோன்றிப் பிணக்கம் உண்டாமென்றும் கூறுவாராய், “செய் பிழையெல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக் கிடமாம்” எனவும் உரைக்கின்றார். தந்தைக்கு மகன் செய்யும் பிழை பொறுக்கு மளவையின் மிகாதாகலின் அவர் அவற்றைப் பொருளாக எண்ணார் என்பது பற்றி, “தாதை நீ அவை எண்ணலை” என்றும், எண்ணாது பொறுத்தலோடு தண்ணிய நின் அருளைச் செய்க என வேண்டலுற்று, “எளியேன் தனக்கு நின் திருத்தண்ணளி புரிவாய்” என்றும் கூறுகின்றார். கோது - குற்றம். கோது நீக்கினாலன்றி உயர்ந்தோர் முனிவராதலின்மையால் “கோதை நீக்கிய முனிவர்கள்” என்றும், பதஞ்சலி வியாக்கிரபாதர் என்ற முனிவர் இருவர் காண அம்பலத்தில் இறைவன் திருக்கூத்து மகிழ்ந்து ஆடினானெனப் புராணம் கூறுவதால், “முனிவர்கள் காணக் கூத்துகந்தருள் குணப்பெருங் குன்றே” என்றும், இறைவன் ஒருவனை யல்லது குணமே யுடையார் பிறர் யாரும் இல்லாமையால், “குணப் பெருங்குன்றே” என்றும் விளம்புகின்றார். தீது நீக்கிய ஒற்றி என்றது, நில நலத்தில் தீது படராதது என்றவாறு.
இதன்கண், தாம் செய்தன எண்ணிறந்த பிழையெனவும், அவற்றைப் பொருளாக எண்ணாமல் பொறுத்துத் தண்ணளி செய்ய வேண்டுமெனவும் விண்ணப்பித்த வாறாம். (6)
|