52. காதல் விண்ணப்பம்

திருவொற்றியூர்

    அஃதாவது இறைவன் திருவடித் தொண்டில் ஈடுபட்டு வாழ்வாங்கு வாழ்தற்கேற்ற வேட்கையைத் தெரிவித்துக் கொள்வது.

    இதன்கண் முதல் நான்கு பாட்டுகளில் தாம் பாவியா யிருத்தலையும், உடலோம்புவதே வாழ்வென்போரை நாடி யுழன்றதையும், மடவார் மயக்கில் வீழ்ந்து கிடந்ததையும், மண்ணில் மயங்கி வினையால் தளர்ந்து துயருற்றதையும் கூறி, பின்னாறு பாட்டுக்களில் திருவடிப் பேற்றுக்குரிமையும், திருவருள் ஞானம் தம்பால் இல்லாமைகண்டு, திருவருள் வாழ்வில் காதல் மிக்கதையும், இறைவன் திருப்புகழை இனிய பாட்டாற் பாடற்கு விழைவு தோன்றியதையும், திருவடித்தொண்டின் அருமை நினைந்து அதற்கு இன்றியமையாத திருவருள் ஞானத்தை நல்குதல் வேண்டும் என்பதையும் எடுத்தோதி விண்ணப்பிக்கின்றார் வடலூர் வள்ளல்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1139.

     வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய
          மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
     தஞ்சம்என் றடைந்தே நின்திருக் கோயில்
          சந்நிதி முன்னர்நிற் கின்றேன்
     எஞ்சலில் அடங்காப் பாவிஎன் றெனைநீ
          இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே
     கஞ்சன்மால் புகழும் ஒற்றியங் கரும்பே
          கதிதரும் கருணையங் கடலே.

உரை:

      சிவபெருமானே, பிரமனும் திருமாலும் புகழ்ந்தோதும் திருவொற்றியூரில் உள்ள சிவக்கரும்பே, சிவகதியை நல்கும் கருணைக் கடலே, வஞ்சம் புரியும் வினைகட்கு ஒரு கொள்கலம் போன்ற மனமுடைய யான் எல்லாவற்றிலும் கொடியவனாவேன்; எளிமைக்கேற்ற புகலிடமென்று நின் திருக்கோயிலை அடைந்து நின் சன்னிதித் திருமுன்பு நிற்கின்றேன்; பொறுக்குமளவிற் கடங்காத பாவியெனக் கருதி இகழ்ந்து நீக்குவையாயின் யான் யாது செய்வேன்? எ.று.

     கல்வி நலம் உடைமையால் பிரமனும், செல்வம் மிகவுடைமையால் திருமாலும் புகழ்வது தோன்றத் திருவொற்றியூரைக் “கஞ்சன் மால் புகழும் ஒற்றி” என்றும் நினைக்கும் நெஞ்சின்கண் கரும்பின் சாறுபோல இன்பம் சுரத்தலால் சிவனைக் “கரும்பே” என்றும், பக்குவ மெய்தும் உயிர்கள் அனைத்துக்கும் அருள்கூர்ந்து சிவகதி தருதலால், “கதி தரும் கருணையங் கடலே” என்றும் கூறுகின்றார். தரத்தரக் குறைபடாத் தன்மை பற்றிக் கருணையுடையோய் என்னாமல் “கருணையங் கடலே” எனச் சிறப்பிக்கின்றார். செய்யப்படுந் தோறும் அறிவுக்குக் கூர்மையும் இன்பமும் பயந்து உயிரை மயக்குவதால் “வஞ்சகவினை” என்றும், பயன் நுகரப்பட்டுக் கழியுந் துணையும் உயிரைத் தொடர்ந்து மனத்தின்கண் நிறைந்து கிடப்பதால், “வினைக்கு ஓர் கொள்கலம் அனைய மனத்தினேன்” என்றும், வினை செய்யும் உயிர்வகை யெல்லாவற்றிலும் கொடுமை மிகவுடையேன் என்பார். “அனைத்தினும் கொடியேன்” என்றும் இயம்புகின்றார். வினைக்குரிய காரணங்களான மனம் மொழி மெய் என்ற மூன்றினாலும் கொடியவன் எனற்கு “அனைத்திலும் கொடியே” னென்றார் எனினும் அமையும். வினைச் சுமை தாங்க மாட்டாமையால் எளிமையுற்று, எளிமைக் கேற்ற எளிய புகலிடம் என்று சிவனது திருக்கோயிலை யடைந்தேன் என்றற்குத் “தஞ்சமென் றடைந்தே நின் திருக்கோயிற் சன்னிதி முன்னர் நிற்கின்றேன்” என்று கூறுகின்றார். குறிப்பறியும் பெருமானாதலின் சன்னிதியின் முன் நிற்பதே போதுவதென்பது கருத்து. “முக நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி உற்றதுணர்வார்ப் பெறின்” (குறள்) என்பர் சான்றோர். எஞ்சல் - பொறுக்குமளவிற்குட் சிறுகுதல். எஞ்சலில் அடங்காப் பாவியென்றது மிகப் பெரிய பாவியென்னும் பொருளது. மிக்க பெரும் பாவமுடையானை இகழ்ந்தொறுத்தலல்லது செயத்தக்கது வேறில்லாமை கண்டு புறம்பென ஒதுக்கலாகா தென வேண்டுவார், “எனை நீ இகழ்ந்திடில் என்செய்வேன்” என்று சொல்லுகின்றார்.

     இதனால், மிக்க பெரும் பாவியென்று இகழ்ந்தொதுக்காது அருள் செய்தல் வேண்டுமென்று முறையிட்டவாறாம்.

     (1)