114. மீளாத வன்றுயர் கொண்டீனர் தம்பால்
மெலிந்துநினை யழைத்தலறி விம்மா நின்றேன்
கேளாத கேள்வி யெலாம் கேட்பிப்பாய் நீ
கேட்கிலையோ வென்னளவிற் கேள்வி யின்றோ
மாளாத தொண்டரக விருளை நீக்கும்
மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
தாளாளர் புகழ்தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தளும் சகச வாழ்வே.
உரை: நன் முயற்சியுடையார் புகழும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே, வேறு வழிகளால் நீக்குதற்கரிய மனவிருளைத் தொண்டர் அகத்தினின்றும் போக்குகின்ற முழுமதியம் போல்பவனே, ஞானத்தாற் பெறலாகும் சுகமென்ற ஞான மழையைப் பொழிகின்ற மேகமே, குறைதலில்லாத வலிய துயர முற்றுக் கீழ் மக்களிடம் சென்று உடல் சோர்ந்து உன்னை நினைந்து பல திருப்பெயர்களை யிட்டழைத்தும் அலறியும் மனவேதனையால் விம்முகின்றேன்; பிற அறிஞர்கள் பால் கேட்டறிய முடியாத ஞானங்கள் யாவையும் சிந்தைக்கண் நின்றுரைத்துக் கேட்பிக்கின்றவனாகிய நீ யான் கூறுவதைச் செவியிற் கேட்கிலையோ? என்னைப் பொறுத்த அளவில் நீ கேட்பதில்லையோ, கூறியருள்க, எ. று.
இம்மை மறுமைகட்குரிய அறப்பொருள்களை நாடி அல்லும் பகலும் முயல்பவர் தாளாளர்; நின் திருவருளை முன்னிறுத்தி உரிய கால இடங்களைக் கண்டு முயன்று கருதியன குறைவறப் பெறுதலால் மனமுவந்து புகழ்ந் தேத்துவது பற்றித் “தாளாளர் புகழ் தணிகை மணியே” என்று சாற்றுகின்றார். எய்துகின்ற துன்பங்கள் கழியாமல் மேன்மேலும் மிக்குற்று வருத்துமாறு புலப்பட, “மீளாத வன்றுயர்” என்றும், அவற்றைப் போக்கிக் கொள்வது கருதி உலகில் கீழ்மைப் பண்புடையாரை யடைந்து அவரது புறக்கணிப்பால் மனம் புண்பட்டு மெய் சோர்ந்து வருந்தினமை தோன்ற, “ஈனர் தம்பால் மெலிந்து” என்றும் கூறுகின்றார். ஈனர், இவ்வுலகில் காணப்படும் கீழ் மக்கள். மெலிவுடையார் வலியுடையாரைச் சாரும் இயல்பினால் நின்னை நின் எண்ணிறந்த அருட் பெயர்களைச் சொல்லி யழைத்தேன்; அரற்றி யழுதேன்; நின் திருவருள் எய்தாரையால் துக்கம் மிக்குத் தொண்டையை யடைக்க விம்மிப் புலம்புகின்றேன் என்பாராய், “நினை அழைத்தலறி விம்மா நின்றேன்” என விளம்புகின்றார். தான் படைத்தளித்த கருவி கரணங்கள் வேண்டிய அறிவை வழங்க மாட்டாத போது உயிர்களின் சிந்தைக்கண் ணின்று அறிவருளுதல் இறைவனுக்கு இயல்பாதலின், “கேளாத கேள்வியெலாம் கேட்பிப்பாய் நீ” என்று இயம்புகின்றார். கேளாரையும் கேட்பிக்கும் கேள்வியனா யிருந்தும் என் முறையீட்டைக் கேளா தொழிந்தனையோ என்பார், “நீ கேட்கிலையோ” என்றும், முறையிடுவோர் எண்ணிறந்தாராக, அவர்களின் அழைப்புக் கிடையே எனது முறையீடு நின் திருச்செவியை எட்டியதில்லை போலும் என்பாராய், “என் அளவில் கேள்வி யின்றோ” என்றும் உரைக்கின்றார்.
இதனால் திருப்பெயர் பலவும் சொல்லி யழைக்கும் முறையீட்டைக் கேட்டருள விண்ணப்பித்தவாறாம். (12)
|