1140. நிற்பது போன்று நிலைபடா உடலை
நேசம்வைத் தோம்புறும் பொருட்டாய்ப்
பொற்பது தவிரும் புலையர்தம் மனைவாய்ப்
புந்திநொந் தயர்ந்தழு திளைத்தேன்
சொற்பதங் கடந்த நின்திரு வடிக்குத்
தொண்டுசெய் நாளும்ஒன் றுளதோ
கற்பது கற்றோர் புகழ்திரு வொற்றிக்
காவல்கொள் கருணையங் கடலே.
உரை: கற்றற் குரியதைத் தேர்ந்து கற்ற நல்லோர் புகழும் திருவொற்றியூர்க்கண் எழுந்தருளிக் காவல் கொண்டருளும் கருணைக் கடலாகிய சிவபெருமானே, நிலைபெற்று நிற்பது போன்று நிலைத்தலின்றிச் சின்னாளில் இறந்தொழியும் உடம்பின்மேல் ஆசை வைத்து அதனைப் பேணுவதன் பொருட்டு ஓய்விலா வுழைப்பால் மேனியழகு கெடுத்துக்கொள்ளும் புலையர் வீடுகட்குச் சென்று மனம் நொந்து அழுது இளைத்தேனாதலால், சொற்களின் எல்லையைக் கடந்து அப்பாலுள்ள உன் திருவடிக்குத் தொண்டு செய்யும் நன்னாளொன்று எனக்கு உளதோ, கூறுக. எ.று
நிலைத்து நிற்பதுபோலத் தோன்றிச் சின்னாளில் இறந்து மறைந்து போவதுபற்றி, உடம்பை “நிற்பது போல நிலைபடா வுடல்” என்றும் அதன்பால் ஆசை வைத்து உண்டியும் உடையும் மருந்தும் தந்து ஓம்புவது சிறப்புடைச் செயலன் றென்பதற்கு, “நேசம் வைத்து ஓம்புறும்” என்றும், ஓம்புதற் பொருட்டு உழைத்து உடல்நலம் கெடுவது தோன்றப் “பொற்பது தவிரும் புலையர்” என்றும் இகழ்கின்றார். புலாலையுண்பவரைப் “புலையர்” என்பதுபற்றி, புலால் உடம்பை ஓம்புவோரையும் “புலையர்” என்று இயம்புகின்றார். ஊனுடம்பையே பெரிதும் விரும்புவோர் இரக்கப் பண்பிலராதலால், அவரது உதவி நாடிச் செல்வோர் அவர் கண்முன் கண்ணீர் விட்டுப் புலம்பி மெலியினும் இரங்கார். அதனால் புலையர் மனைவாய்ப் புந்தி நொந்தயர்ந்து அழுது இளைத்தேன் என்கின்றார். சொற்களின் எல்லை 'சொற்பதம்' எனப்பட்டது. “சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க” (திருவாசக. திருவண்டப். 40) என மாணிக்கவாசகர் கூறுவது காண்க. சொற்றெரியாப் பொருளாயினும் சிந்தைக் கெட்டுதலின், சிந்தித்து வழிபடும் தொண்டு இயல்வதொன்றாதலால், “சொற்பதம் கடந்த நின் திருவடிக்குத் தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ” என்று சொல்லுகிறார். தொண்டு செய்தற்கு எந்நாளும் உரியதென்பது தோன்ற, “தொண்டு செய்நாளும் ஒன்று உளதோ” என இசைக்கின்றார் எனினுமாம். கற்பன பலவாதலால், தாம் கற்றற்கு ஏற்பது இதுவெனத் தேர்ந்து கற்று உணர்ந் தொழுகுவாரைக் “கற்பது கற்றோர்” என்று சிறப்பிக்கின்றார். செய்தவர்தம் செய்வினைப் பயனைப் பிறழாது நுகருமாற்றல் தெளிவும் ஞானமும் எய்துவித்தல்பற்றி, “காவல் கொள் கருணையங் கடலே” எனச் சொல்லிப் பரவுகின்றார்.
இதனால், உடலோம்புதலையே உயிர் வாழ்க்கையின் பொருள் எனக் கருதுவோரை நாடி யுழன்று மெலிந்தமை கூறியவாறாம். (2)
|