1141. முன்னைவல் வினையால் வஞ்சக மடவார்
முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன்
என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான்
எய்தில னேல்உயிர்க் குறுதிப்
பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன்
பேதையில் பேதைநான் அன்றோ
கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே
கடவுளே கருணையங் கடலே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் அமுதம் போன்றவனே, கரும்பும் தேனும் ஒப்பவனே, கருணைக் கடலாகிய கடவுளே, முற்பிறவிகளிற் செய்த வலிய வினைகளால் வஞ்ச மனமுடைய மகளிராகிய முழுத்த புலைத்தன்மை வாய்ந்த குழியின்கண் வீழ்ந்து இளைத்தொழிந்தேன்; கொடியவனாகிய யான் நின்னுடைய திருவருளை அடைந்திலேன்; என்ன காரணமோ? பின்பு என் உயிர்க்கு உறுதியாகும் பொருள் எனக்கும் எய்தும் திறம் அறியேன்; நான் பேதையரிற் பெரும் பேதையாக வுள்ளேனாதலால். எ.று.
கன்னலும் தேனும் அமுதும் போல்வது பற்றிக் “கன்னலே தேனே அமுதே” என்று சிறப்பிக்கின்றார். அளத்தற் கருமையும் கொள்ளக் குறையாமையும் கண்டு இறைவனைக் “கருணையங் கடலே” என்று குறிக்கின்றார். முன்பு செய்த வினைப் பின்னர் வந்து செய்தவனை மயக்கி நுகர்வித்தல் பற்றி முன்னை வல்வினையால் இம்மையில் வஞ்சமகளிர் தொடர்புண்டாகிய தென்பார், “முன்னை வல்வினையால் வஞ்சக மடவார் முழுப் புலைக்குழி விழுந்திளைத்தேன்” என்று மொழிகின்றார். “முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே, என்னை நீ தியக்கா தெழுமட நெஞ்சமே” (புறம். 7) என நம்பியாரூரர் உரைப்பது காண்க. ஆழ் குழி வீழ்ந்தவர் எளிதின் ஏறமாட்டாது வருந்துவது போல வஞ்ச மகளிர் சூழலிற் பட்டவர் எளிதின் மீளாது துன்புறுவது தோன்ற, “வஞ்சக மடவார் குழி விழுந் திளைத்தேன்” என்றும், அக்குழி தானும் வாய் முதல் அடித்தள முற்றும் புலால் நாறுவது என்றற்கு “முழுப் புலைக்குழி” என்றும் பழிக்கின்றார். எல்லாம் வல்லதாகலின் திருவருளை எதிர்த்துத் தடுக்கும் பொருள் ஒன்றுமில்லை யென்ற உண்மையை யுணர்ந்தவராதலின், அவ்வருள் எய்தாமையை நினைந்து “என்னையோ கொடியேன் நின் திருவருள்தான் எய்திலேன்” என்று கூறுகின்றார். இப்பொழுது திருவருள் விளக்கம் எய்தாதாயின், பின்னர் உயிர்க்குறுதி நல்கும் சிவயோக போகங்கள் எய்தும் வாய்ப்பில்லை என்றற்கு, “திருவருள் எய்திலனேல் உயிர்க்குறுதிப் பின்னை எவ்வணம் எய்துவதறியேன்” என வருந்துகின்றார். திருவருளைப் பெறும் நெறிதானும் பேதைமை மிகுதியால் அறிகிலேன் என்பார், “பேதையிற் பேதை நான் அன்றோ” என்று பேசுகின்றார்.
இதனால், வஞ்சக மடவார் மயக்கிடை வீழ்ந்திளைத்துத் திருவருளாகிய உறுதிப் பொருளை எய்தாமற் பேதையிற் பேதை யாயினேன் என வருந்தியவாறாம். (3)
|