1143. அளவிலா உலகத் தனந்தகோ டிகளாம்
ஆருயிர்த் தொகைக்குளும் எனைப்போல்
இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி
ஏழைகள் உண்டுகொல் இலைகாண்
தளர்விலா துனது திருவடி எனும்பொற்
றாமரைக் கணியனா குவனோ
களவிலார்க் கினிய ஒற்றிஎம் மருந்தே
கனந்தரும் கருணையங் கடலே.
உரை: களவு என்னும் காரறிவு இல்லாதவர்க்கு இனியனாகிய திருவொற்றியூரில் மருந்தாய் விளங்கும் பெருமானே, பெருமை நல்கும் கருணைக் கடலே, அளவில்லாத உலகத்தில் வாழும் அனந்த கோடியாகவுள்ள அரிய உயிர்த்தொகுதியில் என்னைப்போல் இளகுதலில்லாத வஞ்சம் பொருந்திய நெஞ்சினை யுள்ளேயுடைய பாவிகளான ஏழையுயிர்கள் உண்டோ? இல்லை; ஆதலால், தளர்தலின்றி உன்னுடைய திருவடியாகிய பொற்றாமரைக்கு நெருக்க மானவனாவனோ? எ.று.
களவுத் தொழிலைப் புரிவோருடைய அறிவைக் காரறிவு என்பர் திருவள்ளுவர். காரறிவின்றித் தெள்ளிய திருவருளறிவு படைத்தவர்க்கு இன்பம் செய்பவனாதலால் சிவனைக் “களவிலார்க் கினிய ஒற்றியெம் மருந்தே” எனவுரைக்கின்றார். ஒற்றியூர்க்கண் கோயில் கொண்டு தன்னை யன்பாற் பணிவாரது பிணி தீர்த்தருளுவது பற்றி “ஒற்றியெம் மருந்தே” என்றும், கருணை புரிவதாற் பெரும்புகழ் எய்துவது கண்டு “கனம்தரும் கருணையம் கடலே” என்றும் கூறுகின்றார். உலகங்கள் அளவிட முடியாதவை யென்பது பற்றி, “அளவிலா உலகத்து” எனவும், ஒன்றே பரம்பொருள் உயிர்க்கணம் எண்ணிற் கடங்காதவை எனச் சைவ நூல்கள் உரைப்பதால், “அனந்த கோடிகளாம் ஆருயிர்த் தொகை” எனவும் எடுத்துரைக்கின்றார். உயிர்கள் பலவாயினும் அறிவுடைமையால் அருமை வாய்ந்தவை எனற்கு-“ஆருயிர்த் தொகை” எனக் குறிக்கின்றார். இளகுதல் - இரக்க வுணர்வால் நெகிழ்தல். நெஞ்சின்கண் இளகுதல் இல்லாமைக்குக் காரணம் இது வென்பார், “வஞ்ச நெஞ்சகன்” என்றும், அதனால் செயலனைத்தும் பாவமாதல் விளங்கப் “பாவி” என்றும், பாவ மிகுதியால் அறிவு குன்றிப் போனமை புலப்பட “ஏழை” என்றும், இத்துணைக் கொடுமைகளும் நிறைந்த உயிர் வேறு இருக்க முடியாதென்ற கருத்தால் “உண்டுகொல்” என வினவியும், “இலைகாண்” என விடுத்தும் சொல்லாடுகின்றார். இத்தனை குறையும் பாவமும் உடைய தான் சிவனது திருவடித் தாமரையை நெருங்க முடியாதென எண்ணினமையால், “உனது திருவடியெனும் பொற்றாமரைக் கணியனாகுவனோ” என உரைக்கின்றார். தன் நெஞ்சின் வஞ்சமும், பாவமும், ஏழைமையும் எண்ணிய போது தளர்வு தானே தோன்றி மிகுதலால் “தளர்விலாது அணியனாகுவனோ” என முறையிடுகின்றார். புதுமையும் பொற்பும் வாடுதலின்றி என்றும் நின்று திகழ்தலால், திருவடி “பொற்றாமரை” எனப்படுகிறது.
இதனால், தன்னைப் போல் வஞ்சமும் பாவமும் அறிவின்மையுடைய உயிர் வேறு இல்லாமையால் தனக்குத் திருவடிப் பேறு எய்துதல் அரிதென விண்ணப்பித்தவாறு, (5)
|