1144. ஞானம்என் பதிலோர் அணுத்துணை யேனும்
நண்ணிலேன் புண்ணியம் அறியேன்
ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன்
எவ்வணம் உய்குவ தறியேன்
வானநா டவரும் பெறற்கரு நினது
மலரடித் தொழும்புசெய் வேனோ
கானவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக்
கடவுளே கருணையங் கடலே.
உரை: கானத்தில் வாழும் வேட்டுவர் உருக்கொளும் ஒருவனாகிய சிவனே, திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் கருணைக் கடலாகிய கடவுளே, சிவஞானம் எனப்படுவதில் ஓர் அணுவளவும் எய்தினேனில்லை; சிவபுண்ணியம் என்பதையும் சிறிதும் அறியேன்; கீழ்மை என்பதற்கே யான் தலைவன் எனப்படுவேனாயினனேன்; இதனால், உய்தி பெறுவது எவ்வாறு என அறியேனாகின்றேன்; வானுலகத்தவரும் பெறுதற்கு அரிய உனது மலர்போலும் திருவடிக்குத் தொண்டு செய்யத் தக்கவனாவேனோ, அறியேன். எ.று
கானகத்தில் தவம் புரிந்த அருச்சுனன் பொருட்டு வேட்டுவன் உருக்கொண்டு சென்ற செய்தி பற்றிக் “கான வேட்டுருவாம் ஒருவனே” என்று கூறுகின்றார். வேட்டுவற்குரிய வேடம் வேட்டுரு எனப்படுகிறது. “கமர்பயில் வெஞ்சுரத்துக் கடுங்கேழற் பின் கானவனாய் அமர்பயில் வெய்தி அருச்சுனற்கருள் செய்த பிரான்” (நன்னிலம்) என்று நம்பியாரூரரும், “காடடைந்த ஏன மொன்றின் காரணமாகி வந்து, வேடடைந்த வேடனாகி விசயனோ டெய்த தென்னே” (சேய்ஞ்) என்று ஞானசம்பந்தரும், பிறரும் பாடுவர். மணிவாசகப் பெருமான், “கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள், விராவு கொங்கை நற்றடம் படிந்தும், கேவேடராகிக் கெளிறது படுத்தும், மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும்” (கீர்த்தி) என வேட்டுருவம் எய்திய செய்திகள் பல கூறுகின்றார். இங்ஙனம் வேட்டுருவம் பல கோடலின் “வேட்டுருவாம் ஒருவனே” எனக் கூறுகின்றார் போலும். உயிரறிவை அனாதியே பற்றியிருக்கும் ஊனமாகிய மலவிருள் நீங்கினாலன்றிச் சிவப்பேறு அரிதென்பது பற்றி நல்லறிஞர் ஞானம் பெற முயல்கின்றனர்; “ஊனத் திருள் நீங்கிட வேண்டின் ஞானப் பொருள் கொண்டு அடி பேணும்” (மயிலாடு) என ஞானசம்பந்தரும், “ஞானத்தை விளக்கை யேற்றி நாடியுள் விரவ வல்லார்க்கு ஊனத்தை யொழிப்பர்” (ஒற்றி) என நாவுக்கரசரும் வற்புறுத்துகின்றார். இவ்வாற்றல் ஞானத்தின் இன்றியமையாமையை வேறு வாய்பாட்டால் வள்ளற் பெருமான், “ஞானமென்பதி லோர் அணுத்துனை யேனும் நண்ணிலேன்” என எடுத்துரைக்கின்றார். ஞானத்துக்கேது புண்ணியமாதலின், “புண்ணியம் அறியேன்” என அடுத்து மொழிகின்றார். “புண்ணிய மேனோக் குவிக்கும் பாவம் கீழ் நூக்கும், புண்ணியத்தினாலே நண்ணிய ஞானத்தினால் இரண்டினையும் அறுத்து ஞாலமோடு கீழ்மேலு நண்ணானாகி, எண்ணும் இகலோகத்தே முத்தி பெறும்” (8 : 3) என்று சிவஞான சித்தியார் தெளிய வுரைப்பது காண்க. உலகில் உடலோம்பி வாழும் உயிர்கள் ஒரு வினையும் செய்யாதிருத்தல் இல்லையாயினும், சிறப்புடைய நல்வினையாகிய புண்ணியத்தைச் செய்யாமை யுண்டாதலால் யான் புண்ணிய மறியாது இழி செயலே புரிந்து கீழ்மைக்குத் தலைமை பூண்டேன் என்பார், “ஈனம் என்பதனுக்கு இறையென லானேன்” என்றும், இதனால் புண்ணியப் பயனாகிய உய்தி பெறற்கு அமைவு இலனானேன் என்பார், “எவ்வணம் உய்குவ தறியேன்” என்றும் இயம்புகிறார். வான நாட்டவர் போகமே நுகர்வதன்றி அதற்குரிய பொருள் செய்யும் அறிவும் மெய்ம்முயற்சியும் இலர் எனப் புராணம் கூறுதலால், “வான நாடரும் பெறற்கரும் நினது மலரடி” எனவும், இறைவன் திருவடித் தொண்டு செயல்வகை யாதலால் அது தானும் அவர்கட்காகா தென்பது விளங்குதலின், “வான நாடரும் பெறற்கரும் நினது மலரடித் தொழும்பு செய்வேனோ” எனவும் இசைக்கின்றார்.
இதனால், சிவஞான சிவபுண்ணிய மில்லாமல் ஈனமே மிகவுடைய யான் நின் திருவடித் தொழும்பு செய்யவ னல்லேன் எனத் தெரிவித்தவாறாம். (6)
|