1147.

     சற்றும்நற் குணந்தான் சார்ந்திடாக் கொடியார்
          தந்தலை வாயிலுள் குரைக்கும்
     வெற்றுநாய் தனக்கும் வேறுநா யாக
          மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை
     அற்றுநின் றவர்க்கும் அரியநின் திருத்தாட்
          கடிமைசெய் தொழுகுவ னேயோ
     கற்றுமுற் றுணர்ந்தோர்க் கருள்தரும் ஒற்றிக்
          கடவுளே கருணையங் கடலே.

உரை:

      கற்பன கற்றுப் பொருளுண்மையை முற்ற வுணர்ந்த சான்றோர்க்கு நன் ஞானம் வழங்கும் ஒற்றிநகர்க் கடவுளாகிய கருணைக் கடலே, நற்குணம் சிறிதுமில்லாத கொடியவர் மனைவாயிலில் இருந்து குரைக்கும் வெறுநாய்க்கும் வேறான நாயாக இருந்து மனம் மெலிகின்ற யான், ஐம்புலன்கள் செய்யும் ஆசைக் குறும்பை வென்றடக்கி யுயர்ந்த பெருமக்கட்கும் பெறற் கரிதாகிய நின் திருவடிக்கு அடிமை செய்தொழுகும் திறம் பெறுவேனோ? பெறலரிதென நினைந்து வருந்தும் எனக்கு அருள் புரிக. எ.று.

     கற்பன கற்றல் வேறு; கற்றநூற் பொருளின் உண்மையை நன்கு கடை போக வுணர்வது வேறு. இரண்டும் ஒருங்குடையாரே ஞானத்தால் அமைந்த சான்றோராதலால், “கற்று முற்றுணர்ந்தோர்” என்று விதந்து மொழிகின்றார். “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார்” (குறள்) என்று இவர்களைச் சிறப்பிப்பர் திருவள்ளுவனார். கற்றுமுற்றுணர்ந்தோர் வேண்டுவது திருவருள் ஞானமாதலால் அதனை “அருள்” எனக் குறிக்கின்றார். “மெய் கற்றவை யுணர்ந்த அடியார் ஞான மிக நின்று தொழ நாளும் அருள் செய்யவல நாதன்” (வைகாவூர்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. சற்றும் - சிறிதும். நற்குணம் சாராவிடத்துத் தீக்குணம் சேர்ந்து கொடுந் தொழில் செய்வித்தல் பற்றி, “நற்குணம் சார்ந்திடாக் கொடியோர்” என்றும், அவர் மனைவாய் உறையும் நாய் வெறிதே குரைத்த லல்லது செயல் வேறுடைய தாகாமையால் அதனை “வெற்று நாய்” என்றும், அதனினும் கடையனாய் மனச் சோர்வும் உடற்சோர்வும் கொண்டு மெலிகின்றேன் என்பாராய், “வேறு நாயாக மெலிகின்றேன்” என்றும் சொல்லி வருந்துகின்றார். சுவை யொளி முதலாகிய புலன்கள் ஐந்தும் தத்தம் பொறி வாயிலாக ஆசையும் அதற்குரிய செயலும் கொண்டு துன்பத்திற் கிடத்துதலால், அவற்றின் செயலை, “ஐம்புலச் சேட்டை” என்று குறித்து, அதனை அடக்கிய சான்றோரை “ஐம்புலச் சேட்டை யற்றவர்” என்றும், அவர்கள் மெய்ந்நெறிக்கண் சலியாது நிற்றலின் “அற்று நின்றவர்” என்றும், அவர்கட்கும் இறைவன் திருவடித் தொண்டு அரிய தொன்றென்றற்கு “நின்றவர்க்கும் அரிய நின் திருத்தாட்கு” என்றும் எடுத்தோதி, இத்துணை அருமை வாய்ந்த திருவடித் தொண்டினை எளியனான யான் கடைபோகச் செய்ய இயலுமோ என ஐயுறுகின்றேன் என்பார், “அடிமைசெய் தொழுகு வனையோ” என முறையிடுகின்றார்.

     இதனால், பரமன் திருவடித் தொண்டின் அருமையும் தமது எளிமையும் சொல்லி விண்ணப்பித்தவாறாம்.

     (9)