1148.

     மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க
          மறைந்துல குயிர்தொறும் ஒளித்த
     இறைவநின் திருத்தாட் கன்பிலாக் கொடியன்
          என்னினும் ஏழையேன் தனக்கு
     நிறைதரும் நினது திருவருள் அளிக்க
          நினைத்தலே நின்கடன் கண்டாய்
     கறைமணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக்
          காவல்கொள் கருணையங் கடலே.

உரை:

     விடக்கறையால் நீலமணி போல் திகழும் கழுத்தையுடைய தெய்வமே, திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டு அருட் காவல் புரியும் கருணைக்கடலே, வேதங்கள் தாமும் இன்னும் பலவகையாலும் உனது உண்மை காணமாட்டாது மயங்கி யலமருமாறு மறைந்து அசேதனமான உலகப் பொருள்களிலும், சேதனமான உயிர்களிடத்தும் பிறர் அறியாவாறு ஒளித்துக் கொண்டிருக்கும் இறைவனே, நின்னுடைய திருவடி மாட்டு அன்பில்லாத கொடியவனாயினும் ஏழையாகிய எனக்கு நினது நிறைவுற்ற திருவருளை வழங்கற்குத் திருவுள்ளம் கொள்வது நினக்குக் கடனாம். எ.று.

     உண்ட விடம் கழுத்திடத்தே நின்று கறை செய்ததாயினும் அக் கறை காண்பார்க்கு நீலமணிபோல் ஒளிசெய்து மகிழ்விக்கிற தென்ற கருத்துப் புலப்பட, “கறைமணி மிடற்றுத் தெய்வமே” என்று கூறுகின்றார். பாரதம் பாடிய பெருந்தேவனார், “கறை மிடறு அணியலும் அணிந்தன்று” என்றதும் இக்கருத்தை வற்புறுத்துகிறது. இன்னவுரு இன்னநிறம் என்று அறியலாகாத பரம்பொருளாயினும், முடியும் முகமும் மார்பும் தோளும் கையும் காலும் கொண்ட உருவுடைய தெய்வ வடிவில் தோன்றுவ துண்மையின், “தெய்வமே” என்று சிறப்பிக்கின்றார். பிறப்பிறப்புக்களையுடைய ஏனைத் தெய்வங்களினின்றும் வேறுபடுத்தற்குக் “கறையணி மிடற்றுத் தெய்வமே” என்று மொழிகின்றார். ஏனைக்காவலர் காவல் பலவற்றினும் சிவத்தின் அருட்காவல் தலைசிறந்ததாகலின், அடை யாதும் இன்றிக் “காவல் கொள் கருணையங் கடலே” எனப் பரவுகின்றார். “உண்டோ முயன்றால் முடியாப் பொருள்” (பழமொழி) என்பதற் கொப்ப, மறைகள் பலதலையாகப் பலகாலமாக முயன்று பரமசிவத்தைக் காணமாட்டா வாயினமையின், “மறைகளும் இன்னும் பலதலை மயங்க மறைந்து” என்றும், உயிர் வாழ்வாங்கு வாழ்தற்கு இன்றியமையா இடமாதலால், உலகின் கண்ணும் வாழ்வாங்கு வாழுமாற்றால் உயிர்கள் உய்தி பெறற் பொருட்டு அவற்றினிடத்தும் உடனாகின்றான் என்பார், “உலகு உயிர்தொறும் ஒளித்த இறைவ” என்றும் இசைக்கின்றார். மறை யென்றது, மறைகளை ஓதியுணர்ந்தவர்களை, வெளிப்பட நின்ற வழி உயிர்களிடத்து அறிவும் செய்கையும் பயனிலவாய்க் கழியுமாதலின், “உலகுயிர் தோறும் ஒளித்த இறைவ” என உரைக்கின்றார். அன்பு செய்யாது கோடிய நெறியினனாயினேன் என்பார், “அன்பிலாக் கொடியேன்” என்றும், “அன்பே ஞானம்” என்னும் அறிவில்லேன் என்றற்கு “ஏழையேன்” என்றும் வள்ளலார் தம்மைக் குறித்துரைக்கின்றார். அறிவிலார் தம்மை அடைந்தபோது அவர்கட்கு அறிவு நல்குவது அருளறமாதலின், “நினது திருவருள் அளிக்க நினைத்தல் நின் கடன்” என்று கூறுகிறார். மண்ணிற் பிறந்து வாழச் செய்த முதல்வன், வாழ்விற் கின்றியமையாத திருவருளை வழங்குவது கடனாதலால், “திருவருள் அளிக்க நினைத்தல் நின் கடன்” என்று வற்புறுத்துகிறார். நினைவே சிவபரம் பொருட்குக் காரணமாதலால் “நினைத்தலே” அமையும் என்று இயம்புகின்றார். சிவன், “விரும்படியார் மண்ணகத்தே வந்து வாழச் செய்தான்” என்றும், மண்ணக வாழ்வு “சிவன் உய்யக் கொள்கின்றா ஆறு” என்றும் மணிவாசகப் பெருமான் இனிதெடுத்து இயம்புகின்றார்.

     இதனால், வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி பெறுதற் கின்றியமையாத திருவருளை வழங்குதல் வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (10)