53. பொருள் விண்ணப்பம்

திருவொற்றியூர்

    பாட்டுத்தோறும் இறுதி சிவபரம் பொருளேயென நிற்றலால், இது பொருள் விண்ணப்பம் எனப்படுவதாயிற்று. உடலோடு கூடி வாழும் உயிரறிவுக்குத் துணையாய் அமைந்தவற்றில் புறக்கருவிகளான கண் காது முதலிய பொறியைந்தினும் அகக்கருவியான மனம் தலையாயது. பொருளல்லாத மண்ணியல் வாழ்வைப் பொருளாகச் செய்யும் சிறப்புப் பற்றி மனத்தைப் பொருள் என்பர். அது தன் வழியே செல்லாமல் உயிரறிவின்வழி நிற்குமாயின் உறுதிப் பொருள் யாவும் கைம்மேலவாம். அதனைத் தன் போக்கிற் செல்லவிடாமல் அறிவு வழியே நிற்பிக்குமாறு திருவருள் செய்க என இறைவனை வேண்டலுற்ற வள்ளற்பெருமான், அதன் கொடுமைகளை இப்பகுதியில் தொகுத்துரைப்பாராய், மாயை மயக்கத்தாற் கோடிகோடி நினைவுகளை எழுப்புவதும், அவற்றால் வினை பல தோன்றித் துயர் விளைப்பதும், காம வுணர்ச்சியிற் கன்றுவதும், யான் எனது என்ற கருத்துக்களால் இருள் செய்வதும், சிறுமைத் தன்மையால் மகளிர் கூட்டத்தில் ஆழ்ந்தழுங்குவதும், ஒருமை நிலை வேண்டுமிடத்து அதனைக் கலைப்பதும், கந்தவாதனை செய்து கடைமை நிலை எய்துவிப்பதும், பிழை பல விளைவிப்பதும் விதந்தோதி விண்ணப்பம் செய்கின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1149.

     உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
          ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
     கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
          கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
     இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
          இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
     திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
          செல்வ மேபர சிவபரம் பொருளே.

உரை:

      சிவஞானத்தால் விளங்கும் மெய்யன்பர்களுக்கு எய்ப்பில் வைப்பாகிய இன்பக் கடலே, என் உயிரே, திலகமே, திருவொற்றியூரில் எழுந்தருளும் எமக்கு உறவானவனே, திருவருட்செல்வமே, பரமசிவமாகிய பரம்பொருளே, உலக வாழ்க்கையிற் கிடந்து வருந்தும் என் நெஞ்சம் ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியென்னும் எண்ணங்களைக் கொண்டு வருந்திக் கலக்கத்தைச் செய்யும் மாயை மயக்கில் என்னை வீழ்த்துகின்றமையால் யான் உள்ளம் குழம்பிச் செய்வதறியாமல் உள்ளேன்; அருள் விளக்கம் செய்தருள்க. எ.று.

     சிவன்பால் மெய்யன்புடையோர் ஞான வொளியுற்றுத் திகழ்பவாதலின், “இலகும் அன்பர்” எனவும், மெய்யாலும் மனத்தாலும் தளர்வுற்றபோது அவர்கட்கு வேண்டுவதருள் செய்தலால், “அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே” என்றும் கூறுகின்றார். “நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நானுறு குறையறிந் தருள்புரிவானை” (வலிவலம்) எனச் சுந்தரர் கூறுவதும், “எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய இப்பாலாய் என்னையும் ஆள வுரியான்” (மணஞ்சேரி) என ஞானசம்பந்தர் விளங்க வுரைப்பதும் இங்கே நினைக்கத் தகுவனவாம். உண்ண வுணவுக்கும், உடுக்க உடைக்கும், இருக்க இடத்துக்கும், நோயுறின் மருந்துக்குமே மனமொழி மெய்யனைத்தும் பெரிதும் உழத்தலால், “உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்” என்றும், மொழியையும் மெய்யையும் இயக்குவது மன நினைவாதலால் நினைவின் பன்மையை “ஒன்று கோடியாய்ச் சென்று சென்று உலைந்து” என்றும் இசைக்கின்றார். உயிரை உடம்பொடு பிணித்தும், உடம்பு செய்வினையொடு இறுக்கியும், உலக வாழ்வினில் தொடர்புறுத்தி ஆழ்த்தியும் மயக்குவதாகலின் “கலக மாயையில் கவிழ்கின்றேன்” எனவும், வீடு பேற்றுக்குச் சமைந்தாலன்றி உய்தியின்மையின், “செயக் கடவதொன்றறியேன்” எனவும் வருந்தியுரைக்கின்றார். மாயையின் மயக்குந் தன்மையை, “உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யுமன்றே” (சிவ. சித்தி .2:53) என அருணந்தி சிவனார் கூறுவதும், “ஓடி யுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” (புறம்: 193) எனச் சான்றோர் கூறுவதும் நோக்குக. வெள்ளம்-கடல். உடல் வாழ்வுக்கு உயிர்போல உயிர் வாழ்க்கைக்கு உயிர்க்குயிராய்த் தெளிவு நல்குதல் பற்றி, “என்னுடை உயிரே” என வுரைக்கின்றார். “காவலன் பேர் நந்தி காட்டிற்றுக் கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளையோனே” (திருமந். 504) எனத் திருமூலர் உரைப்பது அறிக. திலகம்-சிறந்த பொருள். பிறப்புத் தோறும் உய்தி பெறுவித்தற் பொருட்டு உயிரோடு ஒட்டியுறுதல் பற்றி இறைவனை “எம் உறவே” எனப் பகர்கின்றார். செல்வத்துட் செல்வமாகிய திருவருளே யுருவாயவனாதலால், “செல்வமே” என்று சிறப்பித்தும், சிவ தத்துவத்துக்கு மேலாதலால் “பரமசிவம்” என்று குறித்தும், பொருளாகக் கருதும் பொருள்கள் அனைத்துக்கும் மேலாய பொருள் என்றற்குப் “பரம்பொருள்” என்று உரைத்தும் விண்ணப்பம் செய்கின்றார்.

     இதனால் உலகவாழ்விற் பல கோடி நினைவு வழி உழன்று மாயை மயக்கத்தில் வீழும் நிலையை எடுத்தோதியவாறாம்.

     (1)