115.

    மண்ணினான் மங்கையரால் பொருளா லந்தோ
        வருந்திமன மயங்கிமிக வாடி நின்றேன்
    புண்ணியா நின்னருளை யின்னும் காணேன்
        பொறுத்து முடியேன் துயரம் புகல்வ தென்னே
    எண்ணினா லளப்பரிய பெரிய மோன
        இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
    தண்ணினால் பொழில் தணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     மெய்யன்பர் உள்ளத்தில் ஓங்கி நிற்கும் தண்ணருளால் குளிர்ச்சி மிக்க சோலைகளை யுடைய தணிகை மணியே, சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே, எண்ணத்தால் அளந்தறிய முடியாத பெரிய மௌனத் திடையே பெறப்படும் இன்பப் பொருளாயவனே, மண்ணாசை பெண்ணாசை பொருளாசைகளால் உளவாகும் துன்பம் மிகுந்து மனம் மயங்கி உடம்பு வாடி நிற்கின்றேனே யன்றிப் புண்ணிய மூர்த்தியாகிய நின்னுடைய திருவருளை இப்பொழுதும் பெறுகின்றேனில்லை; மிக்கு வரும் துயரத்தையும் பொறுக்க முடியவில்லை; மேலும் உரைப்பதற்கு என்ன இருக்கிறது? எ. று.

     மெய்யன்பர் உள்ள முழுதும் தண்ணிய அருள் நிறைந்து நிற்றலால், அவர்கள் உறையுமிடம் வெம்மை யின்றித் தட்பமே மிக்குறுவதால், “அன்பர்தம் இதயத் தோங்கும் தண்ணினால் பொழில் தணிகை” என்று குறிக்கின்றார். மெய் யன்பர் அறவோராய்ச் செந்தண்மை சான்ற உள்ளத்த ரெனத் திருவள்ளுவர் கூறுவது கொண்டு மெய்யன்பர் இதயத் தோங்கும் தண்மை எடுத்துரைக்கப் பட்ட தென அறிக. மண்ணக மக்கட்குத் துன்பம் விளைவிப்பன மண்ணாசையும் பெண்ணாசையும் பொன் முதலாகிய பொருளாசையு மாதலால், “மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி” என்றும், ஆசை பற்றி வரும் துன்பங்களால் எய்தும் மன வாட்டத்தை, “மனம் மயங்கி மிக வாடி நின்றேன்” என்றும் இசைக்கின்றார். “ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்” (திருமந்) என ஆன்றோர் கூறுதல் காண்க. துன்ப நீக்கம் புண்ணியப் பயனான திருவருளால் எய்துவது. அதனை நினைந்து புண்ணியப் பொருளான முருகப் பெருமானை நெடிது இறைஞ்சியும் திருவருள் கைவராமை கண்டு “புண்ணியா நின்னருளை இன்னும் காணேன்” எனவும், துன்ப மிகுதி அறிவை அயர்வித்தல் கண்டு, “பொறுத்து முடியேன் துயரம்” எனவும், “புகல்வது என்னே” எனவும் சொல்லி வருந்துகின்றார். மோனத்திற் பெறப்படும் இன்பத்தின் சிறப்புச் சிந்தையால் எண்ணி யறிதற்கு எட்டாத தென்றற்கு “எண்ணினால் அளப்பரிய பெரிய மோன இன்பம்” என்று புகல்கின்றார். பொறி புலன்களை யடக்கி மனத்தை ஒரு நெறிப்படுத்துவார்க்கு அமுத மூறி இன்பம் செய்வதைத் திருநாவுக்கரசர், “பொறிப்புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப்படுத்து நினைப்பவர் நெஞ்சுளே அறிப்புறும் அமுதாயவன்” என்பது காண்க. மவுனம் மோனமென வந்தது. மவுனம்-பேசாமல் இருப்பது.

     இதனால், மண் பெண் பொருள் என்ற மூன்றாலும் உளவாகும் துன்பங்களால் அலைப்புண்டு ஆற்றாமை மிக்க திறம் கூறியவாறாம்.

     (13)