1150. எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
இன்ப துன்பங்கள் ஏய்திஎன் நெஞ்சம்
கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
பிரமன் ஆதியர் பேசரும் திறனே
தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
செல்வ மேபர சிவபரம் பொருளே.
உரை: பெண்ணுரு ஒரு பாகம் கொண்டு எமக்கு அமுதமாய் இருப்பவனே, பிரமன் முதலிய தேவர்களும் கண்டெடுத்து உரைக்க முடியாத கூறுபாடுடையவனே, தெளிந்த நிலவு பொழியும் திங்கள் தங்கிய முடியை யுடையனாய்த் திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் தீங்கனி போல்பவனே, திருவருட் செல்வமே, பரசிவமாகிய பரம்பொருளே, எண்ணில்லாத நினைவுகளைக் கொண்டு அந்நினைப்பின் வழியே தொழிற்பட்டு, இன்பமும் துன்பமும் உற்று என்னுடைய நெஞ்சம் குருடு பட்ட குரங்கு போல அலைகின்றது; கடையவனான யான் செய்வதறியாமல் கலங்குகின்றேன்; அறிவுறுத்தருள்க. எ.று.
உமை யம்மையை ஒரு பாகத்தே கொண்ட திருமேனியுடையவனாதலால் “பெண்ணிலாவிய பாகத்து எம் அமுதே” என்று பரவுகின்றார். “பெண்ணியலுருவினர்” (புறவம்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. அடி நினைந்து பரவும் அன்பர்கட்கு அமுதமாய் இன்பம் செய்பவனாதலால், “எம் அமுதே” எனப் பிற அடியார்களையும் தம்மோடு உளப்படுத்தியுரைக்கின்றார். “என்றும் அடியார்கள் பருகும் ஆரமுது” (கோட்டூர்) என ஞானசம்பந்தரும், “பருகா அமிர்தமாம்” (கருகா) என நாவுக்கரசரும், பிறரும் கூறுவர். பிரமன் முதலியோரும் செத்துப் பிறக்கின்ற சிறுமையுடைய தெய்வ வினத்தவராதலால், அவர்களின் சிந்தையும் மொழியுமாகிய கரணங்கள் குறையுடைய வென்பது பற்றிப் “பிரமனாதியோர் பேசருந் திறனே” என்று இயம்புகின்றார். மாணிக்கவாசகர் பொது வகையிற் “பேச்சிறந்த மாசில்மணி” (பண்டாய) என்பதும், சேக்கிழார், “உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்” என்பதும் இக்கருத்தையே உட்கொண்டனவாம். சிவன் முடிமேற் சிறந்து திகழும் திங்களின் நிலவொளி களங்கவிருள் கலவாததாகலின் “தெண்ணிலா முடி ஒற்றியங் கனியே” எனப் புகழ்கின்றார். “தெண்ணிலா மலர்ந்த வேணியாய்” (தடுத்தாட். 107) எனச் சேக்கிழார் உரைப்பர். நெஞ்சு நினைக்கும் எண்ணங்கள் எண்ணிறந்தன வாதலால் “எண்ணிலா நினைப்புற்று” என்கின்றார். “ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியுமல்ல பல” (குறள்) என்று திருவள்ளுவரும், “எண்பது கோடி நினைந் தெண்ணுவன” என ஒளவையாரும் கூறுவர். எண்ணங்கள் பல்கப் பல்க வினை பல்கும்; அவற்றின் பயன்களான இன்பமும் துன்பமும் பெருகுவதால், “அதின் வழியே இன்பத் துன்பங்கள் எய்தி” என்றும், இன்பத்தில் விருப்புற்று அதனை நாடி யோடலும், துன்பத்தில் வெறுப்புற்று நீக்கும் வேண்டி அழுங்கலும் கொண்டு மருண்டு உழலுதல் பற்றி, “நெஞ்சம் கண்ணிலாக் குரங்கு என உழன்றது காண்” என்றும் இயம்புகின்றார். நெஞ்சை நிறுத்தித் தெளிவுறுத்தும் நல்லறிவு இல்லை யென்றற்குக் “கடையனேன்” எனவும், செய்வதறியாது மருளுமாறு புலப்படச், “செயக் கடவதொன்றறியேன்” எனவும் வருந்துகின்றார். அறிவு தந்து அருளல் வேண்டும் என்பது குறிப்பு. “தொண்டர் நெஞ்சு இருள்கூறும் பொழுது நிலாப் பாரித்து அஞ்சுடராய் நின்றான்” (ஆரூர்) என நாவுக்கரசர் அறிவுறுத்துவது வள்ளற் பெருமான் திருவுள்ளத்து ஒளிர்கிறதென உணர்க.
இதனால், நெஞ்சம் எண்ணிறந்த எண்ணங்களை எழுப்பி வினைக்கேதுவாகித் துன்ப விருளிற் கிடத்தி அறிவறியாவாறு செயலறுவிக்கும் திறம் கூறியவாறாம். (2)
|