1151. ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த
ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க்
காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண்
கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
மாணு றக்களங் கறுத்தசெம் மணியே
வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே
சேணு றத்தரும் ஒற்றிநா யகமே
செல்வ மேபர சிவபரம் பொருளே.
உரை: அருள் மாண்பு மிகுமாறு கழுத்துக் கருநிறங் கொண்ட செம்மணி போல்பவனே, வள்ளலே, எளியேனை உலகில் வாழ்விக்கும் மருந்து போல்பவனே, சேணிட மெல்லாம் புகழ் பரவும் திருவொற்றியூர்த் தலைவனே, அருட் செல்வமே, பரசிவமாகிய பரம்பொருளே, உண்பதும் உறங்குவது மல்லது வாழ்க்கையிற் பொருளாவது பிறிதில்லை என நினைத்தொழுகும் ஒதிமரம் போன்ற யான், நின் அடிக்கண்ணே மனம் ஒன்றுவதின்றிப் பலரும் காண வலிய காமவுணர்வே அமைந்தது காண்; அதனால் கடையவனாகிய யான் இனிச் செய்யத் தகுவது அறியேனாகின்றேன், தக்கதனை அருள்க. எ.று.
கடல்விடமுண்டு கண்டம் கறுத்த தாயினும் உலகெலாம் உய்தி பெற்றதனால் சிவபிராற்குப் பெருமாண்பு தோன்றி நிலைபெற்றமையின், “மாணுறக் களங்கறுத்த செம்மணியே” என்று கூறுகின்றார். செம்மேனியம்மானாதலால், “செம்மணியே” எனல் வேண்டிற்று. களம்-கழுத்து. வரைவின்றி அருள் வழங்குதலால் “வள்ளல்” எனவும், மண்ணக வாழ்வு தந்து மயங்குமிடத்து அருளாம் அறிவொளி தந்து உய்தி பெறுவித்தலால் “வாழ்விக்கும் மருந்தே” எனவும் இயம்புகின்றார். நெடுந்தூர நாட்டவரும் புகழ்ந்தோதும் சிறப்புறுவதால் “சேணுறத்தரும் ஒற்றி நாயகமே” என்கின்றார், உண்டியும் உறக்கமுமே வேண்டி மக்களுயிர் நாளும் பாடுபடுவது பற்றி “ஊணுறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன்” என உரைக்கின்றார். ஏனை யுயிர்வகை அனைத்தும் ஒழிவின்றி இவற்றையே செய்து வாழ்வதால், மனவுணர்வுடைய மக்களுயிர், அவற்றின் வேறுபட்டு “ஞான போனக முண்டு” அருளின்பத்தில் கிடந்தமைதலைச் செய்யாமைபற்றி, உள் வலியில்லாத ஒதி மரத்துக்குத் தன்னை ஒப்பாக வைத்து “ஒதியனேன்” என எடுத்தோதுகின்றார். இறைவனுடைய திருவடியில் ஒன்றிய சிந்தையுடையார்க்கு எத்தகைய உறுதியும் எய்துதல் எளிதாமெனச் சான்றோர் யாவரும் ஒருமுகமாக வற்புறுத்தவும் என் மனம் ஒன்றுகிறதில்லை என்பாராய் “ஒன்றிய தின்றாய்” என்றும், காமமாகிய குற்றம் முற்றவும் கடியக் கூடிய தன்றாதலால் “கருங்காமம்” என்றும் காமவுணர்வு நிறைந்திருப்பது பற்றிக் “கருங்காமம்” என்றும், காமவுணர்வு நிறைந்திருப்பது பற்றிக் “கருங்காமம் சான்றது காண்” என்றும் கூறுகின்றார். மனம் ஒன்றுதலின் நலத்தை, “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை” (கோயில்) என நாவுக்கரசர் உரைப்பது காண்க. கருங்காமம் என்றவிடத்துக் கருமை வலிமை குறித்தது, “கருந்தாது கொல்லும் கருங்கைத் திண் கொல்லர்” (சிதம். செய்.) எனபர் குமரகுருபரர். காமம் சான்றது என்பது, “காமஞ் சான்ற கடைக் கோட்காலை” என வரும் தொல்காப்பியத்தை மேற்கொண்டது. காம வுணர்வொழுக்கம் பலர் காண மேம்பட்டு நிற்குமாறு தோன்ற, “காணுற” எனச் சிறப்பிக்கின்றார். காமம் கன்றிய வுள்ளத்தில் உறுதிப் பேற்றுக்குரிய உணர்வுகள் கைவராமையால் “கடையனேன் செயக் கடவ தொன்றறியேன்” என்று உரைக்கின்றார்.
இதனால், இறைவன் திருவடிக்கண் ஒன்றுதலின்றி நெஞ்சம் காமம் கன்றியிருக்குமாற்றால் கையொழிந்தமை எடுத்தோதி விண்ணப்பித்தவாறாம். (3)
|