1152. யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ
யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில்
காது கின்றதென் வஞ்சக நெஞ்சம்
கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
ஓது மாமறை உபநிட தத்தின்
உச்சி மேவிய வச்சிர மணியே
தீது நீக்கிய ஒற்றியந் தேனே
செல்வ மேபர சிவபரம் பொருளே.
உரை: ஓதப்படுவதாகிய பெரிய மறைகளிலும், அவற்றின் அந்தமென ஓதப்படும் உபநிடதத்தின் உச்சியிலும் மேவியிருக்கின்ற வயிரமணி போல்பவனே, தீமையில்லாத ஒற்றிநகர்க்கண் எழுந்தருளும் தேன் போன்றவனே, அருட்செல்வமே, பரசிவமாகிய பரம்பொருளே, யாது சொல்லித் தெருட்டினாலும் கேளாமல், ஐயோ, இதனை யான் செய்தேன் இஃது எனது எனப்படும் இருளுணர்வுற்று என் வஞ்ச நெஞ்சம் என்னை வருத்துகின்றது; அதனாற் கடையனாகிய யான் செய்யத் தகுவது ஒன்றும் அறியா தொழிகின்றேன்; தக்கதனை உணர்த்தியருள்க. எ.று.
சமய நூல்களில் தலையாய தென்று ஓதப்படுவது பற்றி, வேதத்தை “ஓதும் மாமறை” என்றும், வேதாந்தம் என வைத்து ஓதப்படுவது பற்றி உபநிடதத்தை “ஓது உபநிடதத்தின்” என்றும் சிறப்பிக்கின்றார். உச்சியென்றது, வேத வேதாந்தங்களின் உட்படாது அவற்றிற்கு மேலாய இடம் எனக் கொள்க. “வேதக் காட்சிக்கும் உபநிடதத் துச்சியில் விரிந்த போதக் காட்சிக்கும் காணலன்” (கந்தபு. 3 : 21 : 127) எனக் கச்சியப்ப சிவாசாரியார் கூறுவது காண்க. வேதோப நிடதங்களாற் காணப்படாமல் உச்சியிலுள்ளானாயினும் சிவஞானத்தாற் காணப்படுதலால் நிலநலத்தாற் “வச்சிரமணி” என உருப்படுத்திக் காட்டுகிறார். வச்சிரம்-வயிரம். குற்றமில்லாமை தோன்றத் “தீது நீங்கிய ஒற்றி” என்று கூறுகிறார். நெஞ்சினை உணர்வுடையது போல் உரைக்கும் மரபு பற்றி, “யாது சொல்லினும் கேட்பதின்று என் நெஞ்சம்” என்றும், துன்பம் விளைவிப்பதால் “வஞ்ச நெஞ்சம்” என்றும் உரைக்கின்றார். உலக நெறியில் செய்வன செய்தற்கும் பெறுவன பெற்று நுகர்தற்கும் இன்றியமையாத யான் எனது என்னும் உணர்வுகள், முத்தி நெறிக்குரிய நினைவு செயல்களை மறைத்தலின் “யான் எனது என்னும் இவ்விருளில் காதுகின்றது” என்றும், அதனால் கடையனாயினேன் என்பார் “கடையனேன்” என்றும், மொழியும் மெய்யுமாகிய கரணங்கட்குத் தலைமை யாதலின், நெஞ்சம் வேறு வழியில் இயங்குவதால் செயற்குரிய தொன்றும் அறிகின்றிலேன் என்பாராய், “செயக் கடவ தொன்றறியேன்” என்றும் மொழிகின்றார்.
இதனால், யான் எனது என்னும் உணர்வுகளால் இருளுற்றுச் செய்வதறியாது வருந்துதல் கூறியவாறாம். (4)
|