1153. சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத்
துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ
கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்
கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும்
அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே
செல்வ மேபர சிவபரம் பொருளே.
உரை: இரவும் பகலும் திருமுன் நின்று மனம் உருகி வழிபடும் அன்பர்களின் உள்ளத்தில் ஆனந்த ஊற்றாய்ப் பெருகுபவனே மேகங்கள் உலாவும் சோலைகளையுடைய ஒற்றிநகர்க்கண் எழுந்தருளும் கரும்பு போல்பவனே, திருவருட் செல்வமே, பரசிவமாகிய பரம்பொருளே, என் நெஞ்சத்தின் துடுக்கான செயல்கள் சொல்லும் அளவிறந்தன; அவை யனைத்தையும் இப்பாட்டினுள் அடக்குவ தரிது; அதன் வன்மைக்குக் கல்லும் தோற்றுப் போம்; அது கல்லையுடைக்கும் இரும்பினும் வலிமிக்கதாதலால் செய்யத் தக்கது ஒன்றும் அறிகிலேன்; நீயே அருள் செய்தல் வேண்டும். எ.று.
அல்-இரவு; எல்-பகல். அல்லும் பகலும் இறைவனைத் தொழுவது அன்பர்களின் ஒழியாச் செயல்வகை; தொழுந் தோறும் மனம் கரைந்து இன்பத் தேன் உள்ளத்தே ஊறுதலால், “அல்லும் எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பர் உள்ளூறும் ஆனந்தப் பெருக்கே” என்று கூறுகின்றார். “கரவின்றி நன்மாமலர் கொண்டே, இரவும் பகலும் தொழுவார்கள்” (மயிலாடு) எனவும், “தேனினு மினியர் பாலன நீற்றர் தீங்கரும் பனையர்தம் திருவடி தொழுவார் ஊன் நயந்துருக வுவகைகள் தருவார்” (அச்சிறு) எனவும் ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. செல்-மேகம். வானளாவ வுயர்ந்த மரங்கள் நிறைந்த சோலைகள் மேகங்களைத் தம்பால் ஈர்க்கும் இயல்பின வாகலின் “செல்லுலாம் பொழில்” என்று சிறப்பிக்கின்றார். ஒரு வழியும் நில்லாது பயனில்லன பலவற்றை நினைந்து துன்பம் விளைவித்தலின், “சொல்லள வன்றுகாண் நெஞ்சத் துடுக்கனைத்தும்” என்று சொல்லுகின்றார். இங்கு-இப்பாட்டின் இடம். ஒடுக்கிய பெரியோர் பலர் உண்மையின், ஒடுக்குவதெவன் என்பதற்கு நெஞ்சினை ஒடுக்குவ தெவ்வாறெனப் பொருள் கோடல் பொருத்தமாக வில்லை. மனத்தைக் கல்லென்றும் இரும்பென்னும் கூறுபவாதலால், “கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்” என உரைக்கின்றார். இத்தகைய நெஞ்சினையுடையனாதலாற் கடையனாயினேன் என்பார், “கடையனேன்” என்றும், இதனாற் செய்வதறியாது திகைக்கின்றே னென்பாராய் “செயக் கடவ தொன் றறியேன்” என்றும் தெரிவித்துக் கொள்கிறார். 'நீயே' என்பது முதலாயின குறிப்பெச்சம்.
இதனால், நெஞ்சின் கொடுமை கூறி என் வயமாமாறு அருள் செய்க என வேண்டியவாறாம். (5)
|