1154. இம்மை இன்பமே வீடெனக் கருதி
ஈனர் இல்லிடை இடர்மிக உழந்தே
கைம்மை நெஞ்சம்என் றனைவலிப் பதுகாண்
கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
மும்மை யாகிய தேவர்தம் தேவே
முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே
செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே
செல்வ மேபர சிவபரம் பொருளே.
உரை: அயன் அரி அரன் என மூவராகிய தேவர்கட்குத் தேவானவனே, மூன்று கண்களையுடைய மூர்த்தியே, முத்தி யருளும் முதல்வனே, சிவந்த திருமேனியையுடைய பெருமானே, எங்கள் ஒற்றியூர்க்கண் எழுந்தருளும் அருளரசே, திருவருட் செல்வமே, பரசிவமாகிய பரம்பொருளே, இவ்வுலக வின்பமே வீடுபேறு என நினைந்து கீழ்மக்கள் மனைக்கண் துன்பம் மிகப்பட்டு வருந்தியும், மேலும் அவ்வருத்தமே படுமாறு சிறுமையை யுடைய என் நெஞ்சம் என்னை வலியுறுத்துகின்றமையால் கடையனாகியும், யான் செய்யத்தக்க தொன்றும் அறியேனாயுள்ளேன், அருள் செய்க. எ.று.
“மூவரும் இவரென்னவும் முதல்வரும் இவரென்னவும் மேவரும் பொருளாயினார்” (விளநகர்) எனப் பெரியோர் கூறுதலால், “மும்மையாகிய தேவர்தந் தேவே” என்று மொழிகின்றார். முக்கண்ணுடைய திருவுருவில் சகளீகரித்தமையால் “முக்கண் மூர்த்தி” எனவும், முத்தியளிக்கும் பரம்பொருளாதல் தெரிவிக்க “முத்தி முதலே” எனவும், செம்மேனி யம்மானாதலால் “செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே” எனவும் உரைக்கின்றார். இம் மண்ணுலக வாழ்வை இம்மை என்பவாதலால், இவ்வுலகில் பெறலாகும் இன்பத்தினும் வேறு மேலுலக வினபப் பேறென்பதில்லை என உலகாயதர் உரைப்பது கொண்டு, “இம்மை இன்பமே வீடு எனக்கருதி” என்றும் உரைக்கின்றார். ஈனர்-கீழ் மக்கள். உள்ளது கரத்தலும் எள்ளி இகழ்தலும் இயல்பாக வுடையவர்பாற் சென்று இரந்து மனம் புண்பட்டமை புலப்பட “ஈனர் இல்லிடை இடர்மிக வுழந்தே” என்றும், அதனோடு ஒழியாமல் மேன்மேலும் அவ்வருத்தமே படுமாறு செலுத்துதலால், “நெஞ்சம் என்றனை வலிப்பது காண்” என்றும் உரைக்கின்றார். துன்புற்ற விடத்து அதனின் நீங்காமல் மேலும் மேலும் அதனையே நாடுவது சிறுமைச் செயலாதலின், வலியுறுத்தும் நெஞ்சத்தைக் “கைம்மை நெஞ்சம்” என்று இகழ்கின்றார். கை-சிறுமை; கைம்மை-சிறுமை யுடைமை; “கைஞ்ஞானங் கொண்டொழுகும் காரறிவாளர்முன் சொன் ஞானம் சோரவிடல்” (311) என்பது நாலடியார். கைம்மை நெஞ்சம் தன்னையுடையானைக் கடையனாக்குதலால், “கடையனேன்” என்றும், அந்நிலையில் நன்னினைவும் செயலும் உண்டாகாமையால் “செயக்கடவ தொன்றறியேன்” என்றும் கூறுகின்றார்.
இதனால், நெஞ்சின் சிறுமைத் தன்மை கூறிச் செயக் கடவதறியாமைக்கு வருந்தியவாறாம். (6)
|