1155. நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
செல்வ மேபர சிவபரம் பொருளே.
உரை: அன்னப் புள்ளை ஊர்தியாகவுடைய பிரமனும் திருமாலும் முன்னின்று திருமுடியும் திருவடியும் காணமாட்டாமை சொல்லிப் புலம்ப, அடியார்களின் உள்ளத்தில் விருப்புடன் உறைகின்ற அமுதனே, வண்டுகளின் இன்னிசை நிலவும் சோலைகளையுடைய திருவொற்றியூரில் எழுந்தருளும் வாழ்வரசே, அருட் செல்வமே, பரசிவமாகிய பரம்பொரளே, உன்னுடைய திருவடியில் கணமேனும் நிற்பதின்றி இழிந்த மகளிரின் கற்போன்ற கொங்கையில் என் மனம் எப்போதும் நிற்கின்றமையால் கடையனாகிய யான் செய்யத்தகுவது ஒன்றும் அறியேனாயினேன்; அறிவு தந்தருள்க. எ.று.
அன்னவூர்தி- அன்னப் பறவையை ஊர்தியாகவுடைய பிரமன். மால் - திருமால். இருவரும் சிவனுடைய முடியையும் அடியையும் முறையே காண முயன்று, மாட்டாமையால் வருந்திப் போந்து திருமுன்னின்று புலம்பினரென வரும் புராணச் செய்தியை உட்கொண்டு, “அன்ன வூர்தியு மாலும் நின்றலற” எனவும், அவர்கள் தம்முடைய ஆற்றல் மிகுதி நினைந்து முயன்று மாட்டாமையால் அயன்மைப் பட்டனராக, அடியவர்கள் மெய்யன்பே பொருளாகக் கொண்டு வழிபட்டமையின், அவர்களின் உள்ளத்தில் சிவன் எழுந்தருள்கின்றான் என்று சான்றோர் பலரும் உரைப்பதனால், “அடியர் தங்கள் உள்ளமர்ந்தருள் அமுதே” எனவும் உரைக்கின்றார். “முகமெலாம் கண்ணீர்மல்க முன் பணிந்தேத்தும் தொண்டர் அகலமாற் கோயிலில்லை ஐயன் ஐயாற னார்க்கே” (ஐயாறு) எனத் திருநாவுக்கரசர் தெளிவாகக் கூறுவது காண்க. “தேனாய் இன்னமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான்” (ஏசறவு) எனத் திருவாசகம் முதலிய மெய்ந்நூல்கள் ஓதுதலால், “அமுதே” என்கின்றார், தென்னிசை- இனிமையான இசை. சோலைகளில் இனிய இசை நிலவுதற்கேது வண்டினமாதலின் வண்டின் இன்னிசை நிலவும் சோலை என உரைக்கப்பட்டது. உலகியல் வாழ்வில் மண்ணாசை, பொன்னாசை என்ற இரண்டிலும் பெண்ணாசையே மிக்க வலி கொண்டியலுதலால், மனம், தலைசிறந்த உறுதிப் பொருளாகிய இறைவன் திருவடிக்கண் ஒன்றி நிற்றற்குரிய நிலையில் நில்லாது மகளிர் நல்கும் சிற்றின்பத்தை விழைந்து நிற்றலுக்கு மிக்க வருத்த முறுகின்றாராகலின், “நின்னடிக்கண் ஓர் இமைப் பொழுதேனும் நிற்பதின்றி நீச மங்கையர்தம் கன்னவில் தனம் விழைந்தது” என்கின்றார். மனம் ஒன்றுதலின் இன்றியமையாமை கண்டே ஞானசம்பந்தர், அடியார்களை “ஒன்றிய மனத்தடியார்” (கோகரணம்) என்று சிறப்பிக்கின்றார். மாதந்தோறும் பூப்புற்று நீசத் தன்மையுறுதலால் “நீச மங்கையர்” என்றும், இளமை வளத்தால் கொங்கைகள் வன்மையுற்றிருப்பது பற்றிக் “கன்னவில் தனம்” என்றும், காண்பார் கண்கட்கு இலக்காய் விளங்குவது கொண்டு “தனம் விழைந்தது மனம்” என்றும் எடுத்து மொழிகின்றார். விழைதலும் வினையாதலால், கடையனாயினேன் என்பார் “கடையனேன்” எனவும், விழைவின் நீங்கித் திருவடி ஞானம் எய்துதற்கு நெறி விளங்காமல் திகைக்குமாறு புலப்பட, “செயக் கடவ தொன்றறியேன்” எனவும் இயம்புகின்றார். ஏனைய, குறிப்பெச்சம்.
இதனால், மனம் மங்கையர்பாற் சென்று ஒன்ற விழைவது கூறி அதனை விடுதற்கு நெறியருள்க எனக் குறிப்பாய் வேண்டியவாறாம். (7)
|