1156. புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக்
கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான்
கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
விலையி லாஉயர் மாணிக்க மணியே
வேத உச்சியில் விளங்கொளி விளக்கே
சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே
செல்வ மேபர சிவபரம் பொருளே.
உரை: விலையே யில்லாத உயர்ந்த மாணிக்கமானவனே, வேதத்தின் முடியில் விளங்கும் ஒளிவிளக்கானவனே, மலையை வில்லாக வளைத்தேந்தும் ஒற்றியூர்க்கண் எழுந்தருளும் மருந்தாயவனே, அருட்செல்வமே, பரசிவமாகிய பரம்பொருளே, புலைத்தன்மையையுடைய மகளிரின் இரண்டாகிய முலையுச்சிகளினின்றும் உருண்டு விழுந்த என்னைப் புலன்களின் ஆசை வழிச் செலுத்தி ஒருமை கலைந்து கெடச் செய்கிறது இக் கல்லொத்த மனம்; அதனாற் கடையனாகிய யான் செய்யத் தகுவ தொன்றும் அறியேன்; அருள் செய்க. எ.று.
புனைவன யில்லையாயின் புலால் நாறும் உடம்பினராகலின், “புலைய மங்கையர்” என்றும், இரண்டாய் இணையொத்து மலையுச்சி போற் குவிந்திருக்குமாறு தோன்றப் “புணர் குவடு” என்றும் கூறுகிறார். உருண்ட என்னும் பெயரெச்சத் தகரம் தொக்கது. கண் செவி முதலாகிய பொறியின்கண் தங்கும் ஒளியும் ஓசையும் முதலிய புலன்கள் மேல் ஆசை யுறுவித்துச் செலுத்துவதுபற்றிப் “புலன் வழிபடுத்தி” என்றும், ஒன்றியிருந்து நினைவன நினைத்தற்குரிய நிலையைக் கலைத்துக் கெடுப்பது பற்றிப் “புலன் வழிப்படுத்திக் கலைய நின்றது மனம்” என்றும், உருக்கமில்லாத அதன் இயல்பு கூறுவார் “கல்லுறழ் மனம்” என்றும் இசைக்கின்றார். “நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்ற துள்ளம்; ஆயமாய காயந் தன்னுள் ஐவர் நின்று ஒன்றலொட்டார்” (வலிவலம்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. மனவொருமை கலைந்து நிலை யழியுமாயின் எய்துவது கடைமையாதலால் “கடையனேன்” எனவும், செய்வது தேரும் சிந்தையும் கெடுதலால் “செயக் கடவது ஒன்றும் அறியேன்” எனவும் இயம்புகிறார். செம்மணியாகிய மாணிக்கமணி போறலின், சிவனை “உயர் மாணிக்கமே” என்றும், உலகத்து மாணிக்க மணி யொப்பாகாமை பற்றி “விலையிலா உயர் மாணிக்கமணியே” என்றும் சிறப்பிக்கின்றார். வேதம், ஏனைப் புராணம் மிருதி முதலியனபோல பாச ஞானமாத (சிவசித்தி. 9 : 2)லால், அதற்கு மேற்பட்ட சிவஞானத்தால் உணரப்படுவது பற்றி, “வேதவுச்சியில் விளங்கொளி விளக்கே” என்று கூறுகிறார். புரமெரித்த காலைச் சிவன் மேருவை வில்லாக வளைத்த செய்தியைக் குறித்து, “சிலைவிலாக் கொளும் ஒற்றியெம் மருந்தே” எனப் பரவுகின்றார்.
இதனால், மனம் புலன்வழிச் செலுத்தி வழிபாட்டுக் கின்றியமையாத ஒருமை நிலை கலைய நிற்பது கூறி வருந்தியவாறாம். (8)
|