1157.

     தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச்
          சழக்கி லேஇடர் உழைக்கும்என் மனந்தான்
     கந்த வாதனை இயற்றுகின் றதுகாண்
          கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
     எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த
          இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே
     சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே
          செல்வ மேபர சிவபரம் பொருளே.

உரை:

      எந்தையே, எழு பிறப்பினும் எனைத் தொடர்ந்து மகிழ்வித்த இன்பப் பெருக்கே, என் உயிர்க்குயிரானவனே, என் சிந்தைக்கண் இருந்தோங்கும் ஒற்றியூரில் எழுந்தருளும் தேவனே, அருட்செல்வமே, பரசிவமாகிய பரம்பொருளே, தந்தையென்றும் தாயென்றும் மனைவியென்றும் மக்களென்றும் இயலும் மக்களினச் சூழற் சிக்கலில் ஆழ்ந்து துயரடையும் என்னுடைய மனம், இந்திரியங்களின் வயப்படுத்தி இன்ப துன்ப வாதனைகளை எய்துவிக்கின்றது; இதனாற் கடையனாகிய யான் செய்யத் தகுவதொன்றும் அறியேனாகின்றேன்; எனக்கு அறிவு தந்தருள்க. எ.று.

     உலகில் மக்களினம் தந்தை தாய் மனைவி மக்கள் எனப் பிணிப்புண்டு பல்வகைத் துன்பங்கட் குள்ளாகுதலால், “தந்தை தாய் மனை மக்கள் என்று உலகச் சழக்கிலே இடர் உழக்கும்” என வுரைக்கின்றார். சழக்கு-இடர்ப்பாடு. இச்சழக்கினின்றும் நீங்கினாலன்றி உய்தியில்லை என்பது அறிவு நூல். “தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தார மென்னும் பந்தம் நீங்காதவர்க் குய்ந்து போக்கில் லெனப் பற்றினாயே” (ஆரூர்) என ஞானசம்பந்தர் அறிவுறுத்துவது காண்க. இடர்ப்படும் மனம், உய்ந்து போக்கு நாடாமல் கண் காது முதலிய பொறி வழிச் சென்று இன்பமும் துன்பமுமாகிய வாதனைகளைச் செய்தலால் “கந்த வாதனை இயற்றுகின்றது” என முறையிடுகின்றார். கந்தம் - இந்திரியத் தொகுதி. ஞானேந்திரியம் கன்மேந்திரியம் என வகையால் இரண்டாகித் தொகையாற் பத்தாதலால், அவற்றைத் தொகுத்துக் கந்தமென்று குறித்து, அவற்றால் நுகரப்படும் இன்பம் துன்பம் என்ற இரண்டையும் வாதனை யென்பவாகலின், “கந்த வாதனை இயற்றுகின்றது காண்” என்று கூறுகின்றார். “இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே, திரிந்து போய் அருநரகில் வீழ்வேன்” (கண்ட. 1) எனத் திருவாதவூரடிகள் உரைப்பது அறிக. இன்பம், துன்பம் என்ற இரண்டுடன், இரண்டும் கலந்த மயக்கம் என மூன்றாக்கி வாதனை மூன்றென்பாரும் உண்டு. இவற்றை வடமொழியார் இதம், அகிதம், இதாகிதம் என்பர். கந்த வாதனை பந்தத்துக் கேதுவாதலே யன்றி வீடு பேற்றுக்குரிய தலையாய ஞானம் நல்காமையால் கடையனாயினேன் என்பார், “கடையனேன்” என்றும், அறிவருளும் பெருமானாதலின், “செயக்கடவ தொன்றறியேன்; அறிவருளுக” எனவும் வேண்டுகிறார். “நினையும் நினைவாகி அறிநீர்மையில் எய்தும் அவர்க்கறியும் அறிவருளி” (இடும்பா) என்று திருஞானசம்பந்தர் எடுத்தோதுவது காண்க. பிறப்பேழையும் “எழுமை” என்றும், பிறப்புத் தோறும் உயிரோடு தொடர்ந்து உடனாதல் பற்றி, “எனை எழுமையும் தொடர்ந்த இன்பவெள்ளமே” என்றும், “என் உயிர்க்குயிரே” என்றும் பரவுகின்றார். சிந்திப்பார் சிந்தையைக் கோயிலாகக் கொள்பவன் என்பதுபற்றிச் “சிந்தை யோங்கிய ஒற்றியந் தேவே” என்று போற்றுகின்றார்.

     இதனால், கந்தவாதனை செய்யும் மனத்தாற் கடையனாயது கூறி அறிவருள வேண்டியவாறாம்.

     (8)