54. திருவண்ண விண்ணப்பம்
திருவொற்றியூர்
அஃதாவது இறைவனது மெய்
வண்ணங் காண எழுந்த வேட்கை ஆராமையைத் தெரிவித்துக் கொள்வது. தியாக வண்ணப் பதிகத்தின்
வேறுபடுத்தற்கு, இது திருவண்ண விண்ணப்பம் எனப்படுகிறது. இதன் கண் திருவொற்றியூர்த்
தியாகப்பெருமானுடைய அருவுருவத்தின் (நிட்கள, சகள) வண்ணங்காண ஆர்வங் கொள்ளுதலும், அது
பெறாமையால் வருந்துதலும், காட்சி கிடைக்காமையால் கலக்க முறுதலும், அதனால் விளையும்
நினைவுகளால் அலைக்கப் படுதலும், காட்சி பெற மாட்டாமைக்குக் காரணம் செய்வினையாதல்
பழவினையாதல் இருக்கலாம் என வருந்துதலும், மண்ணக வாழ்வின் பந்தமறாமைக்கு இரங்குதலும்,
மகளிர் ஆசை யறாமை நினைதலும், அதற்கேது அருட் பேற்றிற்குரிய நெறியின் நீங்கிய வாட்டம்
எனக் கருதுதலும், அந்நெறியில் நிற்றற்குத் திருவருள் ஞானம் வேண்டி ஏங்குதலும், அது
திருவருட்பார்வையால் எய்தும் எனக் கருதுதலும் என வரும் பலவும் எடுத்துரைக்கப்படுகின்றன.
இது வள்ளற்பெருமான் திருவொற்றியூர்த் தியாகப்பெருமானை வழிபடச் செல்லும் நாட்களில்,
ஒருநாள் பெருமான் அடிகள் திருமூலட்டானம் திருக்காப்பிடப்பட்டமை கண்டு ஒரு புறத்தேயிருந்து
பாடியது என்பர்.
கொச்சகக் கலிப்பா 1159. கண்ணப்பா என்றருளும் காளத்தி அப்பாமுன்
வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
உண்ணப்பா என்றுரைத்த ஒற்றிஅப்பா வந்தருள
எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ.
உரை: திண்ணனைக் கண்ணப்பா என்று அழைத்தருளிய காளத்தி யப்பனே, முற்காலத்தில் அழகிய பால் வேண்டி அழுத உபமனியு என்ற பாலனுக்குப் பாற்கடலைத் தந்து 'அப்பனே உண்க' எனச் சொன்ன திருவொற்றியூரில் எழுந்தருளும் தலைவனே, அப்பனே, என் முன்னே வந்தருள எண்ணுவாயாக என அழுதேங்கும் ஏழையாகிய எனது முகத்தைப் பார்த்தருள மாட்டாயோ? எ.று.
கண்ணப்பருக்குக் குழவிப் பருவத்தில் பெற்றோர் இட்ட பெயர் திண்ணன் என்பது. கண்ணிடந்து அப்பியபோது, வேறு பெயரால் அழைப்பின் கருத்தில் ஏலார் என்பது கருதிக் கண்ணையிடந்து அப்புபவனே என்னும் பொருள்படக் “கண்ணப்பா” என்றருளும் என்கின்றார். “கண்ணிடைக் கணையது மடுத்துக் கையில் வாங்கி அணைதர அப்பினன்” (கண். மறம்) என்று நக்கீர தேவர் கூறுவர். “முதற்சரம் மடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப” (பெரியபு) எனச் சேக்கிழாரும் கூறுவர். காளத்தியப்பன், திருக்காளத்தியில் எழுந்தருளும் தலைவன், மதலை-உபமனியு என்ற குழந்தை. உருவிற் சிறு குழவியாயினும் தவ வன்மையால் பெருங்கடலை யுண்ண வல்லது என்பது உலகறியப் புலப்படுத்தற்கு, “மதலையைப் பால் வாரிதியை உண்ணப்பா என்றுரைத்த ஒற்றியப்பா” என்று விளக்குகின்றார். பெறுவோர் தகுதி நோக்காது, இறப்பப் பெரும் பொருள் கொடுப்பது கொடுப்போர் உள்ளத்து வெறுப்பைப் புலப்படுத்துமாதலின், அஃதின்றி அன்பொடு கொடுத்தமை தோன்றப் பாற்கடலைக் காட்டி, “உண் அப்பா” என்றுரைத்தருளினார். “திருக்கதவந் திறப்பித்துத் தான் திருமுகம் கண்டு பராவுதற்கு அருள் புரிக” என வேண்டுவார், “வந்தருள எண்ணப்பா” எனவும், “ஏழை முகம் பாராயோ” எனவும் இறைஞ்சுகிறார்.
இதனால், ஒற்றித் தியாகப் பெருமானுடைய திருவுருக் கண்டு பராவுதற்குக் காட்சியருள வேண்டியவாறாம். (1)
|