116.

    வஞ்சகராம் கானினிடை யடைந்தே நெஞ்சம்
        வருந்தி யுறுகண் வெயிலால் மாழாந் தந்தோ
    தஞ்சமென் பாரின்றி யொருபாவி நானே
        தனித்தருணீர்த் தாகமுற்றேன் றயைசெய்வாயோ
    செஞ்சொல் மறைமுடி விளக்கே யுண்மை ஞானத்
        தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
    சஞ்சலம் நீத் தருள்தணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     மனத்தின் சலிப்பை நீக்கி நிலை பேறருளும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் எங்கும் நிறைந்தருளும் சகச வாழ்வே, செஞ் சொற்களால் ஞான முரைக்கும் வேதத்தின் உச்சியில் திகழும் ஞான விளக்கமே, மெய்யுணர்வார் உள்ளத்தில் ஊறி யின்புறுத்தும் தேனே, படைத்தல் முதலிய முத்தொழிலினை முறையாகச் செய்யும் பிரமன் முதலாய மூன்று தேவர்கட்கும் தேவனே, வஞ்சகராகிய காட்டுட் புகுந்து மனம் வருந்தித் துன்பங்க ளென்னும் வெயிலால் உலர்ந்து அஞ்ச வேண்டா என்று புகலளிப்பார் ஒருவருமின்றி ஒப்பற்ற பாவியாகிய யான் தனிமை யுற்றுத் திருவருளாகிய நீர் வேட்கை கொண்டுள்ளேன்; அத் திருவருளை நீ எனக் கருளல் வேண்டும், எ. று.

     சஞ்சலம்-துன்பத்தால் சலித்தல்; சுழற்சியுமாம். சலனமின்றி மனம் ஒருமை யுற்றாலன்றித் திருவருள் எய்தாதாதலால், “சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே” என்று கூறுகிறார். முருகப் பெருமான் திருவடியை நினைப்பவர் சிந்தைக்கண் வன்மையும் உறைப்பும் பெறுப என்று அருணகிரிநாதர் குமரகுருபரர் முதலியோர் விதந்து மொழிவதால் இவ்வாறு கூறியருளுகின்றார். எளிதில் விளங்காத திரிசொற்களின்றிச் செவ்விய இனிய சொற்களாலாகியது மறை யென்றற்குச் “செஞ்சொல் மறை” என்று சிறப்பிக்கப்படுகிறது. வேதத்தின் முடிவு உபநிடதம் எனவும், அதன் உச்சியில் திகழ்வது பரம்பொருள் எனவும் சான்றோர் உரைத்தலால் “மறைமுடி விளக்கே” என்கின்றார். உண்மை ஞானம்-மெய்யுணர்வு. ஞானக் காட்சி யுடையார்க்குப் பரமானந்தம் விளைந்த வண்ணமிருத்தலால், “உண்மை ஞானத் தேறலே” என வுரைக்கின்றார். முத்தொழில்-படைத்தல், காத்தல், அழித்தல் என்பன; இவற்றை முறையே செய்பவர் பிரமன் திருமால் அரன் ஆகிய தேவர் மூவருமாவர். இம் மூவரையும் இயக்கும் பரம் பொருள் முருகக் கடவுள் என்றற்கு, “முத்தொழில் செய் தேவர் தேவே” எனத் தெரிவிக்கின்றார். “நல்ல போலவும் நயவ போலவும்” சொல்லிப் பொல்லாங்குச் செய்பவர் வஞ்சகர்; இலை தளிர்களாற் பசுமை காட்டியும், பல்வகை மலர்களால் நறுமணம் தந்தும், காய்கனிகளால் சுவை நல்கியும், விரும்பிப் புகுவார்க்குச் சென்னெறி மறைத்துத் தீது விளைப்பது பற்றிக் கானத்தை வஞ்சகர்க்கு ஒப்பாக நிறுத்தி, “வஞ்சகராம் கானினிடையடைந்து” என்றும், வெயில் தெறும் சுரமாகிய கானம் தன்கண் செல்லுவோரை மிகவும் வெதுப்பி நீர் வேட்கை யெழுப்பி வருத்துவது கண்டு, “உறுகண் வெயிலால் மாழாந்து தனித்து அருள் நீர்த் தாகம் உற்றேன்” என்றும் இயம்புகின்றார், உறுகண்-துன்பம். மாழாத்தல்-மயங்குதல். தஞ்சம், ஈண்டு அஞ்சேல் என்று புகலளித்தல் மேற்று. பாவமே யுருவானவன் என்றற்கு “ஒருபாவி” எனவும், அதனால் துணையாவார் ஒருவரும் இல்லாதவனாயினேன் என்றற்குத் “தனித்து” எனவும் இசைக்கின்றார். திருவருளை நீர் என்பது வழக்கு. “தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத் தந்துய்யக் கொள்வாய்” (திருவாசகம்) எனத் திருவாதவூரர் உரைப்பர். ஒன்றைத் தந்து பரிமாறும் பொருளன்றாதலால் திருவருளை வழங்கி யருள்க என்பாராய்த் “தயை செய்வாயோ” என்று வேண்டுகிறார்.

     இதனால், வஞ்சகரால் தீதுற்று வருந்தும் எனக்கு நின் திருவருளை நல்குக என இறைஞ்சியவாறாம்.

     (14)