1160. மஞ்சுபடும் செஞ்சடில வள்ளலே உள்ளுகின்றோர்
உஞ்சுபடும் வண்ணம்அருள் ஒற்றியூர் உத்தமனே
நஞ்சுபடும் கண்டம்உடை நம்பரனே வன்துயரால்
பஞ்சுபடும் பாடுபடும் பாவிமுகம் பாராயோ.
உரை: பனிமேகம் படியும் சிவந்த சடையையுடைய வள்ளலே, நெஞ்சால் நினைப்பவர் உய்தி பெறுமாறு திருவருள் புரியும் ஒற்றியூர் உத்தமனே, விடம் தாங்கிய கழுத்தையுடைய எங்கள் பரமனே, வலிய துன்பங்களால் பஞ்சு படுவது போல் பெரும்பாடு படுகின்ற பாவியாகிய என் முகத்தைப் பார்க்க மாட்டாயோ? பார்த்தால் அருள் தானே பெருகும். எ.று.
மஞ்சு - பனி மேகம். பொன்னிறச் சடையில் மொய்த்துத் தோன்றும் பிசிர் கங்கை யாற்றின் நீர்த்திவலை படிந்து பகலொளியில் மஞ்சு மேகம் போலத் தோன்றுவது பற்றி, “மஞ்சுபடு செஞ்சடிலம்” என்று புனைந்துரைக்கின்றார். சடிலம் - சடை. உஞ்சுபடுதல் - உய்ந்து தோன்றுதல். உய்ந்து, உஞ்சு என மருவிற்று. “உஞ்சிவர் போய்விடின் நாய்க் குகன் என்றெனை ஓதாரோ” (குகப்) என்று கம்பரும் வழங்குவர். உள்ளுதல் - நினைத்தல். கண்டம் - கழுத்து. உத்தமன்-உயர்ந்த உறவினன். துயருற்றவிடத்து நெஞ்சு பல்வேறு எண்ணங்களால் அலைப்புண்டு வருந்துவதை விளக்கப் பஞ்சினை உவமங் கூறுவது உலகியல். “நான் படும் பாடு சிவனே உலகோர் நவிலும் பஞ்சு தான் படுமோ” எனப் பிறிதோரிடத்தும் வள்ளற் பெருமான் வழங்குவர்.
இதனால், திருவுருக் காட்சி பெறாமையால் வருந்தும் மனநிலையைப் புலப்படுத்தியவாறாம். (2)
|